அமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க நடிகர்!- 15 நிமிடங்கள் பேசியது என்ன?  | actor jm bashir meets bjp president amit shah

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (01/06/2019)

கடைசி தொடர்பு:15:25 (01/06/2019)

அமித் ஷாவைச் சந்தித்த அ.தி.மு.க நடிகர்!- 15 நிமிடங்கள் பேசியது என்ன? 

டெல்லியில் அமித் ஷாவின் பங்களாவுக்குச் சென்ற அ.தி.மு.க-விலிருக்கும் நடிகர் ஒருவர், 15 நிமிடங்கள் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் அமைச்சர் பதவி குறித்த பேச்சும் எழுந்துள்ளது. 

அமித்ஷா பங்களா


பிரதமர் நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ரவீந்திரநாத்குமார் எம்.பி. மற்றும் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் சென்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக சென்னை திரும்பினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத்குமார் எம்.பி மற்றும் அவரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் காலதாமதமாக சென்னை வந்தனர். 

ஓ.பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்குமாரும் அப்செட்டில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் அமித் ஷாவை தனியாக சந்தித்துப் பேசியுள்ளார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் ஜெ.எம்.பஷீர். அவரிடம் பேசினோம்.

``பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றபோது என்னுடைய நண்பர் ஒருவரிடம் மோடியை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். உடனடியாக அவர், அமித் ஷாவைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். பதவி ஏற்பு விழா முடிந்த மறுநாள், அமித் ஷாவின் பங்களாவுக்கு என்னை நண்பர் அழைத்துச் சென்றார். வீட்டில் தேநீர் விருந்து அளித்தனர். அதோடு சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி அன்பாகக் கூறினர். 

நோன்பு என்பதால் சாப்பிடவில்லை. அமித் ஷாவின் அறைக்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றபோது செல்போனை வாங்கி வைத்துக்கொண்டனர். உடனே நான் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அந்த அறைக்குள்  செல்போன் அனுமதியில்லை என்று நண்பர் கூறிவிட்டார். அதோடு அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவில்தான் எடுக்க முடியும் என்று கூறிவிட்டார். 

 அமித்ஷா பங்களா

அமித் ஷாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார் நண்பர். அப்போது அவர் தமிழக அரசியல் குறித்து இந்தியில் பேசினார். நானும் அவருக்கு விவரமாக அரசியல் நிலவரங்களைக் கூறினேன். அதன்பிறகு என் தோளில் கையைப் போட்டபடி நன்றி, வணக்கம் என்று  தமிழில் கூறினார் அமித் ஷா"  

ஜெ.எம்.பஷிரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 ``ரவீந்திரநாத்குமார் எம்.பி-க்கு அமைச்சர் பதவி குறித்து எதுவும் பேசினீர்களா?'' 

``ரவீந்திநாத்குமார் எம்.பி. பதவி குறித்து பேசவில்லை. அவருக்கு பதவி கொடுத்தால் இளைஞர்கள் மத்தியில் அ.தி.மு.க வளரும் என்று கூறினேன்."

 ``தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி தோல்வி குறித்து அமித் ஷாவிடம் என்ன சொன்னீர்கள்?'' 

 ``அதுகுறித்து பேசவில்லை. 15 நிமிடங்களில் பெர்ஷனல் விஷயங்களைத்தான் அதிகமாகப் பேசினோம். அரசியல் பேசும் நேரம் அதுவல்ல". 

``நீங்கள் அமித் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளீர்கள். கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்றீர்களா?'' 

 ``என்னுடைய நண்பர் அமித் ஷாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அந்தமுறையில்தான் அவரைச் சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்தித்திருந்தால் கட்சி தலைமைக்குத் தகவல் தெரிவித்திருப்பேன்"

 ``அமித் ஷாவை சந்தித்த நோக்கம் என்ன?''

 ``உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் கூறினேன். உடனே அவர், ஓகே என்று கூறினார். பிஸியாக இருந்ததால் போட்டோ எடுக்கவில்லை. அடுத்த முறை சந்திக்கும்போது நிச்சயம் போட்டோ எடுப்பேன்". 

அமித்ஷா பங்களா

யார் இந்த ஜெ.எம்.பஷீர்?

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஜெ.எம்.பஷீர் சீட் கேட்டார். விருப்ப மனுவில், `சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தபோது அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முதல் நபர் நான். இதுவே என் தகுதி' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தனக்கு சீட் வழங்கப்பட்டால் சில கோடிகளைச் செலவழிக்கத் தயார் என்று டி.டி யோடு நேர்காணலுக்குச் சென்றார். தற்போது, நடிகர் சங்கத் தேர்தலில் ஜே.கே.ரித்தீஷ் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார் ஜெ.எம்.பஷீர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கமாக இருக்கும் ஜெ.எம்.பஷீர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் பரிட்சயமானவர். அடுத்து, ராஜ்ய சபா எம்.பி. சீட் கேட்டு மனு கொடுக்கவும் உள்ளார்.