‘தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’! - மும்மொழிக் கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு | New Education Policy Recommends Hindi in all States

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (01/06/2019)

கடைசி தொடர்பு:16:31 (01/06/2019)

‘தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்’! - மும்மொழிக் கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு

நாம் தற்போது பின்பற்றும் தேசிய கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இதையடுத்து 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, கல்விக் கொள்கைத் திருத்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  

இந்தி

பல வருடங்களாக நடந்து வந்த ஆலோசனைக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக் கொள்கை நேற்று புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களைப் புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன.

பல்கலைக்கழக கட்டுமானங்களில் மாற்றம் செய்தல், உயர் கல்வி பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு சந்தைக்கு ஏற்ப கல்விமுறை என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைத்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வைத் தடுப்பது, தேசிய கல்வி ஆணையை உருவாக்குவது, அனைத்து மாநிலங்களிலும் இந்தியைப் பயிற்றுவித்தல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்விக் கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் தங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கப்பார்ப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

செங்கோட்டையன்

“தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்ற முடியும்'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்“ எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

கனிமொழி

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க எம்.பி கனிமொழி, “கல்விக் கொள்கையில் ஆங்கிலத்துக்கு அடுத்து இந்தியைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும் மொழி திணிப்பைத் தி.மு.க எதிர்க்கும்” எனக் கூறினார்.

டிடிவி தினகரன் ட்விட்

 “8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது  இந்தியைத் திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டிவி.தினகரன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வைகோ

மும்மொழிக் கொள்கைத் தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார். மோடி அரசு தற்போது கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையால் 1965-ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்புப் போராட்டத்தைவிடப் பல மடங்கு எழுச்சியுடன் தற்போது நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.