சிறுவன் உயிரைப் பறித்த வேன் கம்பி! - முன்கூட்டியே பள்ளியைத் திறந்ததால் நடந்த விபரீதம் | school student died by careless mistake of van driver

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (01/06/2019)

கடைசி தொடர்பு:17:17 (01/06/2019)

சிறுவன் உயிரைப் பறித்த வேன் கம்பி! - முன்கூட்டியே பள்ளியைத் திறந்ததால் நடந்த விபரீதம்

அரசின் உத்தரவை மீறி முன்கூட்டியே பள்ளி திறக்கப்பட்டதால் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல். இவரின் 6 வயது மகன் முகுந்தன். இவன் திருவெண்ணைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ளான். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3-ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தப் பள்ளி மட்டும் இன்றே திறக்கப்பட முகுந்தன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருந்தான். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில்தான் அந்த எதிர்பாராத சோகச் சம்பவம் நிகழ்ந்தது. 

பள்ளி வேன்

பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது சிறுவன் ஸ்கூல் வேனை விட்டு கீழே இறங்கியுள்ளான். அவன் இறங்கும் முன்பே அவசரத்தில் டிரைவர் வேனை எடுக்க படிக்கட்டில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி ஒன்று சிறுவனின் பேக்கில் மாட்டி சிறுவனை இழுக்கக் கீழே விழுந்த அவன் மீது வாகனம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்தவுடன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

சிறுவன் முகுந்தன்

இதற்கிடையே, சிறுவன் இறந்த பிறகும் பள்ளி சார்பில் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் பள்ளி சார்பில் யாரும் வந்து விளக்கமளிக்காமல் சிறுவனின் உடலை எடுக்க மாட்டோம் என ஆம்புலன்ஸை திருப்பி உறவினர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.