`இது சரியாக இருக்குமா?’ - டி.டி.வி.தினகரன் ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவாதம்! | TTV Dinakaran discuss with his party members

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (01/06/2019)

கடைசி தொடர்பு:17:29 (01/06/2019)

`இது சரியாக இருக்குமா?’ - டி.டி.வி.தினகரன் ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவாதம்!

மக்களவைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதன்முறையாக ஆலோசனைக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் டி.டி.வி.தினகரன். கட்சியிலிருக்கும் நிர்வாகிகளிடம் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கியும் விவாதித்துள்ளார். 

தினகரன்

`தேர்தல் தோல்வியால் நாங்கள் அழிந்துபோகப்போவதில்லை; அ.தி.மு.க-வும் தி.மு.க-வும்கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது வரலாறு’ என்று சென்னையில் டி.டி.வி தினகரன் பேசியுள்ளார். சென்னையில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக்கூட்டதுக்குப் பிறகு அவர் இதைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்தபோது, ``மக்களவைத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு டஃப் கொடுத்துவிடலாம் என்று நினைத்தது அ.ம.மு.க. ஆனால், பல இடங்களில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.  

அமமுக

அ.தி.மு.க - அ.ம.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியும் இந்த மக்களவைத் தேர்தலில் சரிந்துள்ளது. எம்.எல்.ஏ பதவியை இழந்த அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து வேறு கட்சிக்குத் தாவும் எண்ணத்திலிருக்கின்றனர். அவர்கள் அப்படியே போகவிட்டுவிட்டால், அ.ம.மு.க கூடாரம் முழுவதும் காலியாகிவிடும் என்று கருதுகிறார் டி.டி.வி. இது தொடர்பாக இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து பேசப்பட்டுள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க-வுடன் இணைவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகவதற்கு முன்பே, ஆட்சிக்கு ஆபத்து வந்தால், சசிகலா தலைமையைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் என எடப்பாடி நினைத்தார். ஆக எதிர்ப்பு எதுவும் இருக்காது. இப்போது இல்லாவிட்டாலும், உள்ளாட்சித்தேர்தலில் கைகோக்கலாமா என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டுள்ளது. இதற்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்திலிருக்கும் நிர்வாகிகள் அ.தி.மு.க இணைப்புக்குத் தயாராக இல்லை” என்கின்றனர். கூட்டத்துக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியிலும்கூட அ.தி.மு.க-வைச்சாடி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.