`முந்திய எடப்பாடி; பிந்திய ஓ.பி.எஸ்!' - தனியே தன்னந்தனியே வைத்திலிங்கம்  | cm edappadi come earlier before ops arrival from delhi

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (01/06/2019)

கடைசி தொடர்பு:18:37 (01/06/2019)

`முந்திய எடப்பாடி; பிந்திய ஓ.பி.எஸ்!' - தனியே தன்னந்தனியே வைத்திலிங்கம் 

வைத்திலிங்கம் 

மத்தியில் அ.தி.மு.க-வுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல அ.தி.மு.க-வின் சீனியர் எம்.பி-க்களும்  வருத்தத்தில் உள்ளனர். இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனிமேல் மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட முடியாது என்று சீனியர் அ.தி.மு.க எம்.பி-க்கள் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வைத்திலிங்கம் டெல்லியிலிருந்து சென்னைக்குத் தனியாக வந்துள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவுக்கு மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ்கள் வந்தன. தமிழகத்தில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வுக்கும் அழைப்பு வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். அவர்களுடன் அமைச்சர்களும் கட்சியினரும் சென்றனர். 

 குறிப்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் எம்.பி-க்கு அமைச்சர் பதவி என்பதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இதனால் ஆதரவாளர்களும் டெல்லிக்குப் படையெடுத்தனர். இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க-வில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவியில் இடம் இல்லை என பா.ஜ.க மேலிடம் கைவிரித்துவிட்டது. 

இதனால், அமைச்சர் பதவி கனவிலிருந்த ஓ.பன்னீர்செல்வமும் ரவீந்திரநாத் குமாரும் அப்செட்டாகினர். தமிழ்நாடு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கண்ணீர்விட்டனர். பதவி ஏற்பு விழா முடிந்த பிறகு, டெல்லியிலிருந்து காலையில் புறப்படும் விமானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சென்னை வந்தனர். அன்றைய தினம் பிற்பகலில் டெல்லியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தனியாக வந்துள்ளார் வைத்திலிங்கம். அவருக்கு அடுத்த விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வந்தனர். 

 வைத்திலிங்கம் மூலம் செக் வைத்த எடப்பாடி பழனிசாமி

வைத்திலிங்கம் டெல்லியிலிருந்து தாமதமாக வந்ததற்கு சில காரணங்கள் இருப்பதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி அ.தி.மு.க-வினர், ``ஓ.பன்னீர்செல்வமும் அவரின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி-யும் டெல்லியில் தங்கியிருந்தது, முதல்வர் ஆதரவாளர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. வைத்திலிங்கத்தின் மூலம் ரவீந்திரநாத் குமார் எம்.பி-யின் அமைச்சர் பதவிக்கு `செக்' வைக்கப்பட்டதால் இந்தச் சமயத்தில் பா.ஜ.க மேலிடத்தை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கலாம் என்ற சந்தேகம் அ.தி.மு.க-வின் சீனியர் எம்.பி-க்களுக்கு இருந்தது. இதனால்தான் அவர்களோடு வைத்திலிங்கமும் டெல்லியில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வமும் ரவீந்திரநாத் குமாரும் விமானத்தில் சென்னை திரும்பும் தகவல் உறுதியானதும் வைத்திலிங்கம் புறப்பட்டார்.

பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு மூவ்மென்ட்களையும் கண்காணித்து அதற்கேற்ப அரசியல் லாபி செய்துவருகின்றனர் ஓ.பன்னீர்செல்வத்தின் பங்காளிகள். எப்படியும் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ராஜ்ய சபா எம்.பி தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் சில மாற்றங்கள் வரும் என்ற தகவல் தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தி.மு.க-வின் வலையில் எந்த எம்.எல்.ஏ-க்களும் விழுந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்துவருகிறார். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுவருகிறார். தேர்தலின்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அ.தி.மு.க தலைமை செய்த காரியங்கள், பா.ஜ.க மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் அ.தி.மு.க-வுக்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்காததற்கு ஒரு காரணம்" என்றனர். 

 வைத்திலிங்கம் மூலம் ரவீந்திரநாத் குமாருக்கு செக்

வைத்திலிங்கத்தின் பெயரை அமைச்சர் பதவிக்கு கொங்கு மண்டல அமைச்சர்கள் முன்மொழிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அப்செட்டாகியுள்ளனர். முதல்வர் தரப்பிலிருந்து பா.ஜ.க மேலிடத்துக்கு உறுதியான தகவல்கள் கடைசி வரை செல்லவில்லை. இதனால்தான் அ.தி.மு.க எம்.பி-க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கமான ஆதரவாளர்கள். ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் பிறகாவது ஓ.பி.ஆர் மாண்புமிகு ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.