ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இடைநீக்கம்: அரசு ஊழியர்களுக்கு மிரட்டலா? | government employee association state president suspend in retirement date

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (01/06/2019)

கடைசி தொடர்பு:21:45 (01/06/2019)

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இடைநீக்கம்: அரசு ஊழியர்களுக்கு மிரட்டலா?

இடைநீக்கம்

அரசு ஊழியர்களை போராட்டம் நடத்தவிடாமல் மிரட்டுவதற்காக ஓய்வு பெறும் நாளில் தன்னை பணி இடைநீக்கம் செய்ததாக அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இடைநீக்கம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். நேற்றுடன் (31.05.2019) இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. ஆனால், ஊரக வளர்ச்சித் துறையில் தவறான பயனாளிகளைப் பரிந்துரை செய்ததாகக் கூறி ஓய்வுபெறும் நாளில் அவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியது, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் தவறான பயனாளியைப் பரிந்துரை செய்தது என நன்னடத்தை விதிகளை மீறியதாக என் மீது 2 குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் பலரை பரிந்துரை செய்துள்ளோம். இத்திட்டத்தில் பயனாளிகள் தேர்வின்போது கணவன் பெயரில் இடம் இல்லாதபோது மனைவி பெயரில் இடம் இருந்தால் அவர்களைப் பரிந்துரை செய்யலாம் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் 2011-12-ம் ஆண்டில் நான் பயனாளியைத் தேர்வு செய்தேன். எனவே, தவறான பயனாளியைப் பரிந்துரை செய்ததாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முழுவதும் தவறானது. இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். ஆனால், போராட்டம் நடத்தியதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தைக் காரணம் காட்டி இப்போது இடைநீக்கம் செய்கிறார்கள்.

சுப்ரமணியன்

ஓய்வுபெறும் நாளில்கூட மாலை 5.45 மணி வரை என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. பின்னர், இரவோடு இரவாக வீட்டுக்கு வந்து இடைநீக்க உத்தரவு ஆணையை வழங்கினார்கள். அரசு ஊழியர்களைப் போராட விடாமல் தடுத்து அவர்களை மிரட்டுவதற்காகவே என் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.