`வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு என்ன பதவி?' - அறிவாலயத்தில் தொடங்கிய அடுத்த விவாதம்! | dmk discussed about vellakoil saminathan posting

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (01/06/2019)

கடைசி தொடர்பு:21:22 (01/06/2019)

`வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு என்ன பதவி?' - அறிவாலயத்தில் தொடங்கிய அடுத்த விவாதம்!

உதயநிதியின் அரசியல் வரவு அறிவாலயத்தில் அடுத்தடுத்த விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

உதயநிதி

நாடாளுமன்றம், சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார் நடிகரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி. தி.மு.க-வின் மற்ற பேச்சாளர்கள் ஒதுங்கி இருக்கப் பம்பரமாகச் சுழன்றார் உதயநிதி. எளிமையான பேச்சு தொனி உள்ளிட்டவையால் அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடத் தி.மு.க-வுக்குக் கூடுதல் பலம் சேர்த்தது. தேர்தல் முடிவில் 38 எம்.பி-க்களும் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளும் தி.மு.க வசம் வந்து சேர்ந்தன. இந்தத் தீவிர பிரசாரத்தை அடுத்து உதயநிதியை இளைஞரணிக்கு முன்னிறுத்த வேண்டும் எனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இதற்காக சில மாவட்டச் செயலாளர்கள் உதயநிதிக்கு ஆதரவாகத் தங்கள் மாவட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அறிவாலயத்துக்கு வந்து கொடுத்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. 

வெள்ளக்கோவில் சாமிநாதன்

தற்போது தி.மு.க-வின் இளைஞரணி செயலாளர் பதவியில் இருப்பவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். இந்தப் பதவியைத்தான் உதயநிதிக்குக் கொடுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அப்படி இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதிக்குக் கொடுக்கும்பட்சத்தில் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுக்கப்படும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. பழைய ராஜ்ய சபா எம்.பி-க்களின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் புதிய எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

வெள்ளக்கோவில் சாமிநாதன்

அப்போது வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுக்கப்படலாம் என்ற தகவல் வலம் வந்துகொண்டிருந்தது. அதேநேரம் அவர் ஒன்றரை ஆண்டுக்காலம் இந்தப் பதவியில் இருந்தாலும் இளைஞரணி சார்பாக ஒரு சிறுகூட்டம் நடத்தவும் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க-வின் முக்கியமான கட்டமைப்புகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும் இளைஞரணி பொறுப்பில் இருந்தாலும் அதை மேம்படுத்தும் மாநாடு உள்ளிட்ட எந்த வேலைகளிலும் சாமிநாதன் ஒருதுளிகூட ஆர்வம் காட்டவில்லை. அவருக்குப் பதவி கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்ற எதிர்க்குரல்களும் எழும்பியுள்ளன.