"இந்தியைத் திணிக்கும் நோக்கமில்லை; மக்கள் கருத்தைக் கேட்காமல் எதுவும் நடக்காது!" - மத்திய அரசு விளக்கம்! | No intention of imposing Hindi says central government

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (01/06/2019)

கடைசி தொடர்பு:22:17 (01/06/2019)

"இந்தியைத் திணிக்கும் நோக்கமில்லை; மக்கள் கருத்தைக் கேட்காமல் எதுவும் நடக்காது!" - மத்திய அரசு விளக்கம்!

பா.ஜ.க 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது பின்பற்றப்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கையைத் திருத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனைகளுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக் கொள்கை நேற்று புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களைப் புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன.

மத்திய அரசு

பல்கலைக்கழக கட்டுமானங்களில் மாற்றம் செய்தல், உயர் கல்வி பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு சந்தைக்கு ஏற்ப கல்விமுறை என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைத்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வைத் தடுப்பது, தேசிய கல்வி ஆணையை உருவாக்குவது, அனைத்து மாநிலங்களிலும் இந்தியைப் பயிற்றுவித்தல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

இந்தக் கல்விக் கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் தங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கப் பார்ப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தின் இதற்கான எதிர்ப்புகள் எழத் தொடங்கின. மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கின. “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்ற முடியும்'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்“ எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசின் கொள்கை முடிவை திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

பிரகாஷ் ஜவடேகர்

இப்படி எதிர்ப்புகள் எழ இந்த விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், ``பொதுமக்களின் கருத்தை மட்டுமே கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது; இது கொள்கை முடிவாக அரசு அறிவிக்கவில்லை. மக்களிடமும் மாநில அரசாங்களிடமும் கருத்துகளைப் பெற்ற பிறகே, மத்திய அரசு இந்த வரைவு அறிக்கையை இறுதி செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிக்கும். மற்ற மொழிகளுக்குப் பிற மொழிகளைத் திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு நோக்கமில்லை. மக்கள் கருத்தைக் கேட்காமல் எதுவும் நடக்காது" எனக் கூறப்பட்டுள்ளது. இதே கருத்தைத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டுமே" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க