அம்மா, அப்பா எனக்கு வைத்த பெயர்... வாசகர்களின் கேள்விகளுக்குத் திருமுருகன் காந்தி அளித்த பதில் | Interview with thirumurugan gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:11 (01/06/2019)

கடைசி தொடர்பு:22:17 (01/06/2019)

அம்மா, அப்பா எனக்கு வைத்த பெயர்... வாசகர்களின் கேள்விகளுக்குத் திருமுருகன் காந்தி அளித்த பதில்

மிழகத்தில், இயக்க அரசியலை முன்னெடுப்பவர்களில் முக்கியமானவர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. 2009-ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த தமிழர்கள் இன அழிப்பில் தொடங்கி, மீத்தேன் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், எட்டு வழிச் சாலை எனத் தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வருபவர். போராடுவதோடு மட்டுமல்லாமல், அது குறித்து சர்வதேச அளவிலும், தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர். அவரிடம், விகடன் வாசகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். கிட்டத்தட்ட 6,000-க்கும் மேற்பட்ட கேள்விகள் வந்திருந்தன.

திருமுருகன் காந்தி

அவற்றில் குறிப்பிட்ட சில கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, திருமுருகன் காந்தியிடம் கேட்டிருந்தோம். அந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களைப் பார்ப்போம்.

``தேர்தல் வரும்போது மட்டும் தாங்கள் மெளனம் காப்பது ஏன் ?'' - சிலம்பரசன்.

``2011 சட்டமன்றத் தேர்தலிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் பிரசாரம் செய்திருக்கிறோம். இந்தமுறை எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுதான் காரணம். மற்றபடி தேர்தல் நேரங்களில் எங்கள் தரப்பு கருத்துகளை முன்வைக்கவே நாங்கள் விரும்புகிறோம்.''

``அரசியலுக்கு நீங்கள் அழைத்து வரப்பட்டீர்களா, இழுத்து வரப்பட்டீர்களா?'' - சதீஷ்

``ஈழ இனப்படுகொலையும் முத்துக்குமாரின் உயிர் ஈகமும்தான் என்னை அரசியலுக்கு இழுத்து வந்தன.''

``தமிழ்த் தேசியம் பேசும் மற்ற அமைப்பினருக்கும் உங்கள் இயக்கத்துக்கும் வேறுபாடு என்ன?'' - மனோஜ்குமார் .

``சாதியை மறுத்து, உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும். மொழி, வளம், பண்பாடு ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிற தமிழ்த்தேசிய அமைப்புகள் எங்களின் தோழமைதான். இவற்றைப் பின்பற்றாத இயக்கங்களை, எங்களின் சக இயக்கமாக நாங்கள் பார்க்கவில்லை.''

கேள்விகள்

``தந்தை பெரியாரைப் பற்றிக் குறைகூறும் தமிழ்த்தேசியம் பேசுபவர்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?'' - தமிழ்பாரதி.

``வரலாற்றில் யாருடைய பங்களிப்பையும் புற்ககணித்து நியாயமான அரசியலைக் கட்டியெழுப்ப முடியாது. பெரியாரின் பங்களிப்பை மறுப்பது, அவர் மீதான வன்மத்தையும் போதாமையையும்தான் காட்டுகிறது. அது நேர்மையான அரசியல் கிடையாது.'' 

``இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் நீங்கள் மற்ற மதங்களைப் பற்றி பேசுவதில்லை, மற்ற மதங்களில் மூட நம்பிக்கைகள் இல்லையா?''
- சிவக்குமார்.

``இது தவறான குற்றச்சாட்டு. நான் அனைத்து மதங்களில் இருக்கின்ற மூட நம்பிக்கைகளையும்தான் விமர்சனம் செய்கிறேன். அதைத் தெரிந்துகொள்ளாமல்தான் எனக்கு டேனியல் போன்ற பெயர்களை வைக்கிறார். என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயர் திருமுருகன்தான்.''

முகிலன் எங்கே, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தாமல் போராடியிருந்தால் என்னவாயிருக்கும்... போன்ற பல கேள்விகளுக்குத் திருமுருகன் காந்தி அளித்த பதில்களை கீழ்கண்ட இணைப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை