``பி.ஜே.பியினர் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்!” - திருப்பூர் எம்.பி சுப்பராயன் | tiruppur mp subbarayan press meet in erode

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (02/06/2019)

கடைசி தொடர்பு:09:03 (02/06/2019)

``பி.ஜே.பியினர் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்!” - திருப்பூர் எம்.பி சுப்பராயன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஈரோட்டில் இன்று திருப்பூர் எம்.பி.சுப்பராயன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எம்.பி

அப்போது ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.பி.சுப்பராயன், ``திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற மாட்டேன் எனப் பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப கணிப்புகளை வெளியிட்டார்கள். அந்தக் கணிப்புகளுக்கும், மக்களின் மன ஓட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகின்ற வகையில் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எம்.பி

எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்ற முறையிலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மக்களின் கருவியாகவும், நான் எனது கடமைகளை ஆற்றுவேன். தொகுதிப் பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி சேதாரமில்லாமல் மக்களிடத்தில் சென்றடைவதற்கு உரிய வழிமுறைகளையும், கண்காணிப்பையும் தொடர் கவனத்தையும் மேற்கொள்வேன். கமிஷன் என்ற சொல்லுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பதையும், கடந்த காலத்தைப் போல் நிகழ்காலத்திலும் வாழ்ந்து காட்டுவேன். என்னிடமிருந்து எனக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கும், எங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று பணியாற்றியவர்களுக்கும் செயலாற்ற நான் கடமைப்பட்டுள்ளவன் என்பதை உணர்கிறேன். 

இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் எது தீங்களிக்குமோ, அந்த பி.ஜே.பி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இவர்கள் மீது எள்முனை அளவு எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. தேசிய நலன்களைப் புறக்கணிப்பது, தேசத்தின் சொத்துகளை அந்நிய நாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் பி.ஜே.பியினர். ஐந்து ஆண்டுக்கால பி.ஜே.பி ஆட்சி தமிழகத்தை ஒரு திவால் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கடந்த காலங்களில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இன்றைக்குக் கோதாவரி - காவிரி இணைப்பு என வாய் ஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.