கஞ்சா கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஏட்டு கைது! - நாகர்கோவில் காவல்துறையில் அதிர்ச்சி சம்பவம் | police constable arrested in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (02/06/2019)

கடைசி தொடர்பு:11:41 (02/06/2019)

கஞ்சா கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஏட்டு கைது! - நாகர்கோவில் காவல்துறையில் அதிர்ச்சி சம்பவம்

கஞ்சா விற்ற கும்பலை விசாரணைக்காக அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர்களை வழிமறித்து, செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்த காவலர் மற்றும் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏட்டு கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சைலஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சாம்சன். இவர் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டுபேரை நாகர்கோவில் கோட்டார்ப் பகுதியில் வைத்து பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆறுகாணி காவல்நிலைய காவலர் சைலஸ் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த காவலரை தாக்கிய சம்பவத்தில் சஸ்பெண்டில் இருக்கும் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய ஏட்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் பைக்கில் அங்கு வந்துள்ளனர். தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சாம்சன் விசாரணை நடத்துவதை வீடியோ எடுத்ததுடன், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். அப்போது அங்குவந்த எஸ்.பி. தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வீடியோ எடுத்த காவலர்களை கண்டித்துள்ளனர்.

கிருஷ்ணகுமார்

ஆனால், தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர் சைலஸ் ஆகியோர் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர் சாம்சனை ஆபாசமாகத் திட்டியதுடன், கஞ்சா விற்றதாகக் கருதப்படுபவர்களுக்கு ஆதரவாகப் பேசி தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னை பெரிதானதால் ஏட்டும், காவலரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆறுமுகம் கோட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஏட்டு கிருஷ்ணகுமார் மற்றும் காவலர் சைலஸ் ஆகியோர் மீது அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தல், குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். காவலர் சைலசை போலீஸார் தேடி வருகின்றனர். கஞ்சா விற்கும் கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.