``தமிழகத்தில் எந்த மொழியைத் திணித்தாலும் கண்டிப்போம்!" - கமல்ஹாசன் பேட்டி! | "We will condemn any language in Tamil Nadu!" - Interview with Kamal Hassan

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (02/06/2019)

கடைசி தொடர்பு:12:21 (02/06/2019)

``தமிழகத்தில் எந்த மொழியைத் திணித்தாலும் கண்டிப்போம்!" - கமல்ஹாசன் பேட்டி!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கரூர் கோர்ட்டில் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 கமல்ஹாசன்

நடந்துமுடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், 'அவரது பெயர் நாதுராம் கோட்சே' என்றும் பேசிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.


 கமல்ஹாசன்.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் பெற்று வந்த நிலையில், நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2 நீதிபதி விஜய் கார்த்திக் முன்பு கமல் ஆஜராகி பிணையில் சென்றார். அப்பொழுது காவல்துறையினர் கமல்ஹாசனை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிடாமல், நீதிபதிகள் செல்லும் வழியாக அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸார் பல்வேறு கெடுபிடிகளை கடைப்பிடித்ததால், செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்றார் கமல்ஹாசன்.


 கமல்ஹாசன்..

முன்னதாக அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, கரூர் வேலாயுதம்பாளையம் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மேடையிலிருந்து கமல்ஹாசன் இறங்கியபோது, அவர்மீது பி.ஜே.பியைச் சேர்ந்தவர்களால் காலணி, முட்டை ஆகியவை வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல்ஹாசன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை கடைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியது:
 கமல்ஹாசன்...

``நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், அதுகுறித்து பேசுவது முறையல்ல. `அரசியல் கட்சியின் சார்பில், மக்களை திருப்திபடுத்த முடியவில்லை என்று நினைத்துள்ளீர்களா?' என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்ததுதான். பள்ளபட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் சென்னை மெரினாவிலும் பேசினேன். அதுகுறித்து எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம். 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தாங்கள் வாங்கிய வாக்கு வித்தியாசத்தினை வைத்து பஞ்சாயத்து தேர்தலை எப்படி உங்கள் கட்சி சந்திக்க உள்ளது' என்று எங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதுகுறித்து நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். 
மக்கள் எங்களுக்கு பெரும் பங்கேற்பு கொடுக்க உள்ளனர். மேலும், சென்ற தேர்தல்களில் நாங்கள் வாங்கிய வாக்கு வங்கிகளைப் பார்த்து அரசியல் அறிஞர்களே பிரமித்து உள்ளனர். இந்தி திணிப்பு மற்றும் மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது. ஆகவே, கெயில், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. அரசியல் வாதிகளும், பத்திரிகைகளும் அந்தத் திட்டங்களுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். மத்தியில் ஆளும் பி.ஜே.பி அமைச்சரவையில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். அதுகுறித்து பேச வேண்டுமென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், இந்தியை மட்டுமல்ல, எந்த மொழித் திணிப்பையும் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம். தேவைப்பட்டால், இந்திமொழி திணிப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும்" என்றார்.