`2 ஜி வழக்கால் தூத்துக்குடி மக்கள் வருத்தப்படுவார்கள்'- தமிழிசை ஆவேசம்! | Thoothukudi people will be worried that we have voted for the wrong candidate regards 2g case says tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (02/06/2019)

கடைசி தொடர்பு:13:11 (02/06/2019)

`2 ஜி வழக்கால் தூத்துக்குடி மக்கள் வருத்தப்படுவார்கள்'- தமிழிசை ஆவேசம்!

``உலக கவனத்தை ஈர்த்த 2ஜி ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால், வாக்குகளை தவறானவருக்குத் தவறாகச் செலுத்தி விட்டோமோ என்று மக்கள் ஆதங்கப்படுவார்கள்.” எனத் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மருத்துவ முகாமைத் தொடங்கிவைப்பதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். இன்று அவருக்குப் பிறந்தநாள் என்பதால், விமான நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கேக் வெட்டி தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஆக்கபூர்வமான அரசியலை நோக்கி பா.ஜ.க, தமிழகத்தை எடுத்துச் செல்ல நினைக்கிறது. நான் தோற்றாலும் தமிழக மக்களுக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் என்ன தேவையோ அதைச் செய்துதர பாடுபடுவேன்.

கோவில்பட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட, தூத்துக்குடி எம்.பி.யாக உள்ள கனிமொழி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தகவல் வந்தது. தமிழகத்தில் தி.மு.கவினர்தான் அதிகமான மது ஆலைகளை நடத்தி வருகின்றனர். லாப நோக்கோடு அல்லாமல் அந்த மது ஆலைகளை தி.மு.கவினர் முதலில் மூட வேண்டும். அதன் பிறகு மதுக்கடைகளை மூடுவதற்கு மனு அளிக்கலாம். தமிழகத்தில் பெரிய, பெரிய பிரச்னைகளுக்குக் காரணம் தி.மு.கதான்.

ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்ததும் அவர்கள்தான். ஆனால், தற்போது பா.ஜ.க மீது பழியைப் போட பார்க்கிறார்கள். மும்மொழிக் கொள்கை பற்றி கருத்து கேட்கப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் பா.ஜ.க இந்தியைத் திணிப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஊழல் அதுதான்.

அதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. ஆகவே அதில் தவறு செய்தவர்கள் ஏற்கெனவே சிறை சென்றிருக்கிறார்கள். எனவே தவறானவருக்கு நமது வாக்கை தவறாகச் செலுத்தி விட்டோமோ என்று மக்கள் ஆதங்கப்படுவார்கள், வருத்தப்படுவார்கள். இங்கே சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்வதைப் போல, தமிழகத்தில் தற்போது, வெற்றி பெற்றுள்ள 37 தி.மு.க எம்.பிக்களும் பாராளுமன்றத்திலும் வெளிநடப்புதான் செய்வார்கள். ஆகவே மக்களுக்கு தேவையான எதையும் அவர்கள் செய்யப் போவதில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க