ஹைட்ரோ கார்பன் போராட்டம் எதிரொலி - 430 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு! | case filed against 430 farmers in thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (02/06/2019)

கடைசி தொடர்பு:17:54 (02/06/2019)

ஹைட்ரோ கார்பன் போராட்டம் எதிரொலி - 430 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

டெல்டா விவசாயிகளுக்கு வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் தங்கள் விவசாயத்தைக் காக்கவும், விளைநிலங்களைக் காக்கவும் போராடியே தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

போராட்டம்

இயற்கை ஒரு புறம் அழிக்கும் பட்சத்தில் அந்த இயற்கை வளங்களை அழிக்க நாம் அதை விட முனைப்பாக இருக்கின்றோம். விவசாயிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது போல் அவர்கள்தான் இதைக் காத்திட எத்தனை இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஹைட்ரோ கார்பன் இயற்கையை அழிக்க வந்த பேராபத்து. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தத் திட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும் பொதுமக்களும் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாகத் தொடர் முழக்கப் போராட்டம் சுமார் 13 இடங்களில் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. திருவாருர், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், கூத்தாநல்லூர், சேத்தான் குளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விளைநிலங்களில் இறங்கியும், நீர் நிலைகளில் இறங்கியும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், வேதாந்தா நிறுவனத்தையும் இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசை எதிர்த்தும் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

போராட்டத்திற்குக் காவல்துறையினர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும் தடையை மீறிப் போராடினார். ``தடை செய் தடை செய்  ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடைசெய்" என்று முழக்கமிட்டனர். டெல்டா பகுதியினை சோலைவனமாக ஆக்காமல் இருந்தாலும் பாலைவனமாக மாற்றிவிட வேண்டாம் என்று மத்திய அரசுக்குப்  போராட்டத்தின் மூலம் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து விவசாயிகளையும் விளைநிலங்களை அளிக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மக்களைக் காக்கவே அரசு மக்களை அழிப்பதற்காக அன்று என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 430 விவசாயிகள் மீது இன்றைக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடமும்  விவசாயிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் திருவாரூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.