அழகில் அசத்திய கிளிமூக்கு மயில்வால் சேவல்கள் - களைகட்டிய கண்காட்சி | Traditional Rooster exhibition at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (02/06/2019)

கடைசி தொடர்பு:18:31 (02/06/2019)

அழகில் அசத்திய கிளிமூக்கு மயில்வால் சேவல்கள் - களைகட்டிய கண்காட்சி

அழிந்து வரும் நிலையில் உள்ள பாரம்பர்ய இனமான கிளிமூக்கு, விசிறி வால் சேவல்களை மீட்டெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேவல் கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த வகை சேவல்களை வளர்ப்பதன் மூலம் பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதோடு பணமும் சம்பாதிக்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சேவல்
 

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை உக்கடை எஸ்டேட் சார்பில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கண்காட்சி மாலை வரை நடைபெற்றது. கிளிமூக்கு போன்று அழகான மூக்கும், மயிலுக்கு இருப்பது போல் வாலும் கொண்ட இந்தச் சேவல்களை கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ரசித்தனர். இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை எனத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பவர்கள் தங்கள் சேவல்களோடு ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன. நல்ல அழகான மூக்கு கொண்ட முதல் தரத்தில் இருக்கும் 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு எல்.இ.டி டி.வி பரிசளிக்கப்பட்டது. மேலும், அழகான மயில் போன்ற வால் கொண்ட 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு மொபைல் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட சேவல்களுக்கு சுமார் 1 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஒருங்கிணைப்பாளர்கள்

இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், பொதுவாக சேவல்களில் சண்டைச் சேவல், கத்திக் கட்டு, வெத்தடி சேவல் எனப் பல வகை உண்டு. அதுபோல் கிளிமூக்கு, விசிறி வால் சேவல்கள் ஒரு வகையைச் சேர்ந்தது. கிளி மாதிரி அழகான மூக்கு, மயில் மாதிரி அழகான வால் கொண்டது இதன் சிறப்பம்சமாகும். தமிழர்களின் பாரம்பர்யமான இந்த சேவல்களின் பூர்வீகம் தமிழ்நாடுதான். இங்கிருந்து இவை மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருக்கின்றன.

கண்காட்சி

இந்த வகை சேவல்கள் சண்டைக்குப் பயன்படுத்துவது இல்லை இவை அழகிற்காக மட்டுமே ஒரு குழந்தை போல் நம் முன்னோர்கள் வளர்த்து வந்துள்ளனர். பல பேர் இந்தச் சேவலை வளர்த்து வந்தாலும் இவை தற்போது அழியும் நிலையில் உள்ளது. இப்படியே சென்றால் எதிர்காலத்தில் இப்படி ஒரு சேவல் வகை இருந்ததே யாருக்கும் தெரியாமல் போய்விடும். எனவே, இது போன்ற கண்காட்சி நடத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் வகையில் பலர் இவற்றை வளர்ப்பதற்கு ஆர்வமுடன் முன் வருவார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகவும் இருக்கும். நல்ல தரமான செழுமையான சேவல்கள் ரூ.5,000 தொடங்கி ரூ.2 லட்சம் வரை விற்பனை ஆகிறது. கோழி ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. ஒரு ஜோடிக் குஞ்சுகளின் விலை 5,000 ரூபாயிலிருந்து 50,000 வரை விற்பனையாகிறது எனத் தெரிவித்தார்.

சேவல் கண்காட்சிக்கு வந்திருந்த சேவல்கள்

சிவகங்கையிலிருந்து குடும்பத்தினருடன் சேவலுடன் கண்காட்சியில் கலந்து கொண்ட தேவி என்பவர் கூறுகையில், "எங்களுக்கு ரெண்டு குழந்தைகள் மூன்றாவதாக இந்தச் சேவலையும் குழந்தை போல் வளர்த்து வருகிறோம். இதைப் பராமரிக்க தினமும் நூறு ரூபாய் செலவாகும். கம்பு, பாதாம் போன்றவற்றைதான் உணவாகக் கொடுப்போம். இப்போது இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தோம். பரிசை ஜெயிப்பதற்கு மட்டுமல்ல பாரம்பர்யத்தை மீட்கவுமே இது போன்ற கண்காட்சியில் கலந்துகொண்டு வருகிறோம் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க