பழங்குடிகள், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் - அமெரிக்காவில் கூடிய தமிழர்கள் | Conference for culture public affairs mïnistry USA

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (02/06/2019)

கடைசி தொடர்பு:20:45 (02/06/2019)

பழங்குடிகள், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் - அமெரிக்காவில் கூடிய தமிழர்கள்

இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அவலங்களை எடுத்துரைக்க  அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

 இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிலவரங்களை அறிய அமெரிக்க அரசு சார்பில் 22 நாள்கள் சிறப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்கப் பழங்குடியின மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள், கள ஆய்வாளர்கள்  என ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக சிலரை இனம் கண்டு தேர்வு செய்கின்றனர்.அவர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து அடித்தள மக்களின் நிலைகளைக் கேட்டறிந்தும்,கருத்துக்கேட்பு மற்றும் கருத்தரங்குகள் நடத்துகின்றனர்.

இதன் அடிப்படையில்  இந்தியாவில் இருந்து 7 போர் தேர்வாகியுள்ளனர். இதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.தமிகத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மற்றும் கோவை பகுதியின் பிரதிநிதியாக பழங்குடி-தலித் செயற்பாட்டாளர் வீரப்பன் தேர்வாகி அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் வீரப்பன் கூறுகையில் ”அமெரிக்க அரசின் சார்பில் இந்தியாவில் பழங்குடி - தலித் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தேர்வு செய்து 22 நாட்கள் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகப் பொது மன்னிப்பு சபை, பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், போன்ற இடங்களில் பழங்குடி தலித் மக்களின் உரிமைகள் மீறாமல் இருக்கவும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்  என்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து 7 செயற்பாட்டாளர்களை அழைத்துள்ளனர்.

culture public affairs mïnistry US அழைப்பின் பேரில் நீலகிரி-கோவையைச்சேர்ந்த பழங்குடி சமூக செயற்பாட்டாளர் பிரதிநிதியாக என்னைத் தேர்வு செய்துள்ளனர். கருத்தரங்கு மட்டுமல்லாது வாசிங்டன், மிசிசிபி, நியூ ஓர்லண்ஸ் பெண்சில் வேணியா போன்ற பகுதிகளில் விளக்கப் பயிற்சியும் நடைபெறவுள்ளது.மேலும் செவ்விந்திய பழங்குடிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது. இதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் நிலையை அறிந்துகொள்ள முடியும் அதேசமயம் இந்திய பழங்குடிகள் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்” என்றார்.