‘வர்த்தக அரசியல் நோக்கமல்ல; அங்கீகாரம் கிடைச்சாச்சு’ - திவாகரன் திடீர் உற்சாகம் | Electoral Commission Approved Dhivakaran party

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (02/06/2019)

கடைசி தொடர்பு:21:52 (02/06/2019)

‘வர்த்தக அரசியல் நோக்கமல்ல; அங்கீகாரம் கிடைச்சாச்சு’ - திவாகரன் திடீர் உற்சாகம்

திவாகரன்


சசிகலாவின் சகோதரர் திவாகரனின் ‘அண்ணா திராவிடர் கழகம்’தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் காட்சிகள் மாறியது.  அதில் உதயமானது தான் அண்ணா திராவிடர் கழகம்.  ஜெயலலிதாவின் நிழல் போல் செயல்பட்டு வந்த சசிகலா சொந்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் தினகரன் பின்னால் அதிமுகவினர் இருந்தனர். மீண்டும் காட்சிகள் மாறியது தினகரன் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். இந்தநிலையில் தான் டிடிவி தினகரன் அதிமுகவைக் கைப்பற்றியே தீருவேன் எனத் தனது ஆதரவாளர்களுடன் வெளியில் வந்தார். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. தினகரன் பின்னால் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிகள் சிலர் அணிவகுத்து வந்தனர். தினகரனுக்கு உறுதுணையாக சசிகலாவின் சகோதரர் திவாகரனும் உடன் இருந்தார்.  

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் ஏற்பட்டது. கழகத்தை மீட்பேன் என வந்தவர்கள் இடையே கலகம் ஏற்பட்டது. என் வழியை நான் பார்த்துக்கொள்கிறேன் என அண்ணா திராவிடர் கழகத்தை நிறுவினார் திவாகரன். பொதுச்செயலாளராகத் திவாகரனும், மாநில மாணவர், இளைஞரணி செயலாளராக அவரது மகன் ஜெய்ஆனந்த் உள்ளனர். கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ‘அண்ணா திராவிடர் கழகத்துக்கு’ இந்திய தேர்தல் ஆணையம்  அங்கீகாரம் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு திவாகரன் எழுதியுள்ள கடிதத்தில், “ அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை இன்றைய இளைஞர்களின் இதயங்களில் பதியவைக்க நமக்குள் இருந்த சிந்தனை தொகுப்பிற்கு நாம் சூட்டிய பெயர் தான் அண்ணா திராவிடர் கழகம். நாம் வர்த்தக அரசியலுக்காகக் கட்சியை துவங்கவில்லை. நம்முடை ய எண்ணங்களுக்கு வலிமை சேர்த்த தொண்டர்களுக்கு நன்றி.  நமது கட்சி அண்ணா திராவிடர் கழகத்தின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.