‘இந்த உதவியை நாங்க மறக்க மாட்டோம்!’ - வறுமையில் தவித்த குடும்பத்தை நெகிழச்செய்த வேலூர் இளைஞர் | vellore youth build a toilet for poor

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (03/06/2019)

கடைசி தொடர்பு:08:10 (03/06/2019)

‘இந்த உதவியை நாங்க மறக்க மாட்டோம்!’ - வறுமையில் தவித்த குடும்பத்தை நெகிழச்செய்த வேலூர் இளைஞர்

திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதாரச் சீர்கேடு என்பதை வலியுறுத்துவதற்காக, வறுமையில் தவிக்கும் ஒரு குடும்பத்துக்கு இலவசமாகக் கழிவறை கட்டிக்கொடுத்து அசத்தியிருக்கிறார், வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து பணியாற்றிவரும் அந்த இளைஞர், பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

வேலூர் இளைஞர் தினேஷ் சரவணன்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இந்த இளைஞர், அப்துல் கலாம் மாணவர் முன்னேற்றச் சங்கத்தில் மாநிலச் செயலாளராக இருக்கிறார். இந்த அமைப்பின்மூலம் வேலூரைச் சேர்ந்த ஏழைகளுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். அரிசி, பருப்பு எனச் சில நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை, நண்பர்களின் உதவியுடன் மாதம் ஒரு ஏழைக் குடும்பத்துக்கு வாங்கிக்கொடுக்கிறார். வீடு வீடாக மரக்கன்றுகளையும் வழங்குகிறார். 

இந்த நிலையில், வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில், வறுமையில் வாடும் சித்ரா (35) என்பவரின் குடும்பத்துக்கு இலவசமாகக் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார். கணவரை இழந்து, மகள் மற்றும் மகனுடன் சிறிய வீட்டில் வசித்துவரும் சித்ரா, கழிவறை இல்லாததால் அவதிப்பட்டுவந்தார். இதையறிந்த தினேஷ் சரவணன், இலவசமாக 37 ஆயிரம் மதிப்பில் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார். இதற்காக, சத்துவாச்சாரி போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட மணலைக் கொடுத்து உதவிசெய்திருக்கிறார்கள்.

இலவச கழிவறை

இதுபற்றி பயனடைந்த சித்ரா கூறுகையில், ‘‘என் வீட்டுக்காரர் ஆறுமுகம் கட்டடக் கூலிவேலை செய்துவந்தார். நாலு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். பொண்ணு பத்தாவது படிக்கிறாள். பையன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். நான் வீட்டு வேலைசெய்றேன். மாசம் ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்குது. சாப்பாட்டுக்கே வழியில்ல. பாத்ரூம் இல்லாம பொண்ண வச்சிக்கிட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். விடியருதுக்கு முன்னாடியும், இருட்டிய பிறகும் திறந்தவெளிக்கு போயிட்டிருந்தோம். 

கவர்மென்ட்டுல சொன்னேன். இலவச கழிவறை திட்டத்துல இப்ப கட்டமுடியாதுனு அதிகாரிங்க சொல்லிட்டாங்க. நான் ஏழைனு தெரிஞ்சதும் இந்தத் தம்பிதான் உதவி பண்ணுது. குளியலறை, கழிவறை பெருசா கட்டிக் கொடுத்திருக்காங்க. எங்க ஊருல நிறையப் பேருக்கு இந்தத் தம்பி அரிசி, பருப்பு எல்லாம் கொடுத்து உதவி பண்ணுது. இந்த உதவியை நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். அந்த தம்பி நல்லா இருக்கணும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

சித்ரா

தினேஷ் சரவணன் கூறுகையில், ‘‘கழிவறை கட்டித்தர்றதுக்கு நண்பர்கள் முடிந்தளவு பணஉதவி செஞ்சாங்க. எஸ்ட்டிமேட் போட்டுத்தான் கழிவறை கட்டுற பணியைத் தொடங்கினோம். ஹாலோ பிளாக் கல்லை லோடுவண்டியில ஏத்தி இறக்க கூலி கேட்டாங்க. நாங்களே ஏத்தி இறக்கி பணத்தை மிச்சம் பண்ணினோம். மணலுக்கு தட்டுப்பாடு இருக்கிறதுனால, சத்துவாச்சாரி போலீஸார்கிட்ட உதவி கேட்டோம். போலீஸார், சேவை மனப்பான்மையோடு பறிமுதல்செய்து வெச்சிருந்த ஒரு யூனிட் மணலைக் கொடுத்து உதவி பன்னாங்க’’ என்றார்.