மகனின் முதல் பிறந்தநாள் - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாடிய தொழிலதிபர் | Businessman celebrate the son birthday at kumbakonam

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/06/2019)

கடைசி தொடர்பு:09:15 (03/06/2019)

மகனின் முதல் பிறந்தநாள் - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாடிய தொழிலதிபர்

கும்பகோணத்தில் தொழிலதிபர் ஒருவர், ஹெலிகாப்டரைப் பறக்கவைத்து, அதன்மூலம் மலர் தூவி  தன் மகனின் முதல் பிறந்தநாளைக்  கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறந்த நாள்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர், கணேஷ். இவருக்கு 50 வயது ஆகிறது.இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு நீண்டகாலமாக  குழந்தை பாக்கியம் இல்லை. அதனால், இவர்கள் பல கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். கடந்த ஆண்டு, இவர்களுக்கு  அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கணேஷ், கும்பகோணம் அருகே உள்ள கொற்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக்கொண்டு பால் உற்பத்தி நிறுவனம் நடத்திவருகிறார். மேலும், சொந்தமாக ஹெலிகாப்டர்  ஒன்றும் வைத்துள்ளார். இதற்காகக் கொற்கையில், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் அமைத்துள்ளார்.  

ஹெலிகாப்டர்


இந்நிலையில் கணேஷ் - அகிலா தம்பதியின் மகன் அர்ஜூனுக்கு நேற்று பிறந்தநாள். இதையடுத்து, தவமிருந்து பெற்ற மகன்  அர்ஜூன் பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகச் செய்ய  பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி  கணேஷ், முக்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார். பின்னர், அர்ஜீன் பிறந்தநாளை  ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது,  அவர்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வானில் தாழ்வாகப் பறந்துவந்து, அர்ஜுன் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மீதும்  மலர்களைத் தூவியது.

உறவினர்கள்

ஹெலிகாப்டர் மூலம் திடீரென மலர் தூவப்பட்டதால், பலர் இன்ப அதிர்ச்சியில் மகிழ்ந்து வியந்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறப்பதைக் கண்டு குழப்பம் அடைந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.  “ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் பிறந்தநாள் விழாவுக்காக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதற்காக விழாக் குழுவினரின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம்  அனுமதி பெற்றே இப்படியான விழாவைக் கொண்டாடுகின்றனர். 'ஹெலிகாப்டர் புறப்படும் இடம், பறக்கவேண்டிய உயரம் ஆகியவற்றை கண்டிப்பாகப்  பின்பற்ற வேண்டும்' எனக் கூறித்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க