`பறக்கும் ஃபீனிக்ஸ் பறவை; தொட்டிலில் கிடக்கும் குழந்தை!'‍- கருணாநிதி நினைவிடத்தில் தத்ரூப அலங்காரம் | Former DMK president Karunanidhi birthday

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (03/06/2019)

கடைசி தொடர்பு:11:51 (03/06/2019)

`பறக்கும் ஃபீனிக்ஸ் பறவை; தொட்டிலில் கிடக்கும் குழந்தை!'‍- கருணாநிதி நினைவிடத்தில் தத்ரூப அலங்காரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் இன்று. தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள், கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். 

கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில், 1924 -ம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி பிறந்தார் கருணாநிதி. சிறிய கிராமத்தில் பிறந்து தன் எழுத்து மூலமும் போராட்டங்களின் மூலமும் வெளி உலகத்துக்கு அறிமுகமானார். பின்னாள்களில் மாநில அரசியல், தேசிய அரசியல் என எதுவாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்தார். எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, எம்.எல்.ஏ, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்தார்.

மெரினாவில் ஸ்டாலின்

கடந்த வருடம் ஆகஸ்ட்  7-ம் தேதி, உடல்நலக் குறைவால் கருணாநிதி உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால், தி.மு.க தொண்டர்கள் இதை நெகிழ்ச்சியுடன், ஏழைகளுக்கு இலவச உதவிகள் செய்து கொண்டாடிவருகின்றனர். 

ஃபீனிக்ஸ் பறவை அலங்காரம்

இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருஉருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதைசெலுத்தினார். அவருடன் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் இருந்தனர். பின்னர், அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று, அங்கும் இதேபோன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். 

கருணாநிதியின் மெரினா நினைவிடம்

ஒவ்வொரு நாளும் கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதிலும், ஏதாவது சிறப்பு நாள்கள் என்றால் அலங்காரம் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்று, கருணாநிதிக்கு பிறந்ததாள் என்றால் எப்படி அலங்காரம் செய்திருப்பார்கள் என யோசித்துப்பாருங்கள். ஆம், பிரமாண்ட அலங்காரம்தான்.

கலைஞரின் இளமையான படத்தை நடுவில் வைத்து, அதைச் சுற்றி பல வண்ணப் பூக்களுடன் தி.மு.க-வின் சின்னமான உதய சூரியன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே, கலைஞர் உதயம் என எழுதப்பட்டுள்ளது. எழுதுவது என்றால் கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும் எனப் பலருக்கும் தெரியும். அதை எடுத்துரைக்கும் வகையில் அவரது நினைவிடத்தில் பெரிய பேனா ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கருணாநிதியின் நினைவிடத்தில் ஃபீனிக்ஸ் பறவையின் மாதிரியும் அதன் அருகில் தொட்டிலில் குழந்தை படுத்திருப்பது மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை எரிந்தாலும் மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல், இன்று கருணாநிதி மீண்டும் எழுந்துள்ளார் என்பதைக் கூறும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அவரின் நினைவிடத்துக்கு பல தலைவர்கள் வருவார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.