தமிழகம் கண்ட முதல் பிரமாண்ட கருவாட்டுச் சந்தை - இது மயிலாடுதுறை மண்ணின் அடையாளம்! #MyVikatan | Mayiladuthurai Karuvattu Sandhai is 100 years old

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (03/06/2019)

கடைசி தொடர்பு:11:32 (03/06/2019)

தமிழகம் கண்ட முதல் பிரமாண்ட கருவாட்டுச் சந்தை - இது மயிலாடுதுறை மண்ணின் அடையாளம்! #MyVikatan

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையின் தெற்கு நுழைவுவாயிலில் ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மயிலாடுதுறை மேம்பாலத்தைக் கடப்பவர்கள் அனைவரையும் ஒரு கணம் மெய் மறக்க வைக்கிறது கருவாட்டு மனம். 

கருவாட்டு சந்தை

 

தமிழகத்தில் முதலாவது கருவாட்டுச் சந்தையாகத் தொடங்கப்பட்ட மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை, நூற்றாண்டைக் கடந்து இன்னமும் தன் இயல்பைத் தொலைக்காமல், கருவாட்டுப் பிரியர்களைக் கவர்ந்து வைத்திருக்கிறது. நெத்திலியில் ஆரம்பித்து வாளை, கெண்டை, கெளுத்தி, வஞ்சிரம் என அனைத்து வகை கருவாடுகளையும் இங்கே வாங்கலாம். பாறை, வாளை உள்ளிட்ட கருவாடுகள் கிலோ 100 ரூபாய்க்கும், மற்ற இடங்களில் அதிக விலையில் விற்கப்படும் கருவாடுகள் விலை குறைவாகவும் சில்லறை விற்பனையிலும் கிடைக்கின்றன.

கருவாட்டு சந்தை

சுட்டுப்போட்ட ஒரு கருவாடு இருந்தால் போதும், கவளம் கவளமாக உள்ளே போகும் பழைய சோறு. கஞ்சியும் கருவாடும் உடல் உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழன். ஆனால், இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் ‘கருவாடு’ என்று சொன்னால் கூகுளைத் தேடுவார்கள். 

அந்த அளவுக்கு கருவாடு தேடல் இப்போது குறைந்துவிட்டது. என்றாலும், மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தைக்கு இன்னும் மவுசு குறையவில்லை. பழையாறு, திருமுல்லைவாசல், தென்னாம்பட்டினம், கோணயாம்பட்டினம், வாணகிரி, பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம், செருதூர், வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வேதாரண்யம், கோடியக்கரை என 25-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தளங்கள் கொண்டு 135 கிலோ மீட்டருக்கு நீண்ட கடற்கரையைக் கொண்டது நாகை மாவட்டம். 

கருவாட்டு சந்தை

கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கிறது மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை. அனைத்து மீனவர்களுக்கும் பொது வான  ஓர் இடமாகவும் வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, 100 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் சந்தை தொடங்கியிருக்கிறார்கள். ரயிலடிக்குப் பக்கத்திலேயே சித்தர்காட்டில் அமைந்திருக்கும் இந்தச் சந்தை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே கூடுகிறது. அன்று மட்டும் சர்வசாதாரணமாக  5,000 பேர் வரை இந்தச் சந்தையைக் கடக்கிறார்கள்; சுமார் 5 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. சனிக்கிழமை பின்னிரவு இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கிவிடும் என்பதால், சனிக்கிழமை மாலையே வியாபாரிகள் இங்கு வந்துவிடுகிறார்கள். 

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரிகள் இங்கு வருகிறார்கள். இரண்டு மணிக்கு தொடங்கி, அதிகாலை  6 மணிக்குள் மொத்த வியாபாரத்தையும் முடித்துக்கொண்டு, பெரிய வியாபாரிகள் மூட்டையைக் கட்டிவிடுகிறார்கள்.

அடுத்த கட்ட சிறு வியாபாரிகள், காலை  5 மணிக்கு கடை விரித்து, காலை 10 மணிவரை முட்டிமோதுகிறார்கள்.  மாலை வரைக்கும் சில்லறை வர்த்தகம் களைகட்டுகிறது.  சந்தை கூடும் இடம், அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. அவர்களால் ஆண்டுக் குத்தகைக்கு விடப்படுகிறது. இங்கே சந்தை நடத்த, நகராட்சிக்கும் வரி செலுத்த வேண்டும். அறநிலையத் துறையும் நகராட்சியும் இதையெல்லாம் கணக்குப்போட்டு வசூலித்துக்கொண்டாலும், சந்தைக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து கொடுக்கவில்லை.

கருவாட்டு சந்தை

தங்கள் கஷ்டங்களைப் பட்டியல் போடத் தொடங்கினார்கள், கருவாடு வியாபாரிகள் :  

“கருவாட்டை எடுத்துக்கிட்டு ராத்திரியே இங்கே வந்துடுறோம். ஆனா, இங்க தங்குறதுக்கு எந்த வசதியும் இல்ல. ரயில்வே ஸ்டேஷன்லதான் படுத்துக்கவேண்டியிருக்கு. வியாபாரிங்க முதல் நாள் ராத்திரி வந்து மறுநாள் சாயந்தரம்தான் வீட்டுக்குப் போறோம். அதுக்கு நடுவுல அவசர ஆத்தரத்துக்கு ஒதுங்கக்கூட இடமில்லாம படாதபாடு பட்டுப்போறோம்யா” என்கின்றனர்.

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தையில் கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததோடு, கருவாடு விற்க வரும் வியாபாரிகளே சொந்தச் செலவில் கொட்டகை அமைத்து  வியாபாரம் பார்க்க வேண்டும். அவர்களுக்கென கட்டட வசதியும் இல்லை. அடிப்படை வசதியும் இல்லை. 

கருவாடு வியாபாரிகளிடம் கட்டணம் வசூலித்த அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜிடம் பேசினோம்... 

"சந்தையின் அடிப்படை வசதியை மேம்படுத்த , போதிய நிதி இல்லை என்றும் கடைக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுவதால், சந்தையை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும்" தெரிவித்தார். 

நூறாண்டு பாரம்பரியமும், கருவாட்டை நம்பிப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை நகர வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.