நீரில் மூழ்கடித்துக் கொன்ற மணல் கொள்ளைக் கும்பல்!'- தடுக்கப் போனவருக்கு நடந்த துயரம் | A man who tried to block sand fleece drowned and killed Tension in Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (03/06/2019)

கடைசி தொடர்பு:12:38 (03/06/2019)

நீரில் மூழ்கடித்துக் கொன்ற மணல் கொள்ளைக் கும்பல்!'- தடுக்கப் போனவருக்கு நடந்த துயரம்

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றவரைத் தண்ணீரில் மூழ்கடித்து, கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட மோகன்
 

ராமநாதபுரத்தில், அச்சுந்தன்வயல் முதல் பட்டினம்காத்தான் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி ரூ.35 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தப் பணியை அமைச்சர் மணிகண்டனுக்கு நெருக்கமான நபர் ஒருவர் டெண்டர் எடுத்துள்ளார். இந்த சாலைப் பணிக்காக, ராமநாதபுரம் அருகே இளமனூர் புரண்டி கண்மாயில் மணல் எடுக்கப்பட்டுவருகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான அளவில் மணல் எடுக்கப்பட்டு, வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால், புரண்டி கண்மாயில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என இளமனூர் கிராம மக்கள் கோரி வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று மாலை புரண்டி கண்மாயில் மணல் எடுத்தவர்களை இளமனூர் கிராம மக்கள் சிலர் தடுத்துள்ளனர். அப்போது ஆயுதங்களுடன்  இரு கார்களில் வந்த கும்பல், மணல் கொள்ளையைத் தடுத்த கிராம மக்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் லட்சுமணன், செல்வம், முருகேசன், சாத்தையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும், மோகன் என்பவரைத் தாக்கிய மணல் கொள்ளைக் கும்பல், அவரை அங்கு தேங்கிக்கிடந்த தண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இதனால் சுயநினைவின்றிப்போன மோகனை அக்கும்பல் தங்கள் காரில் ஏற்றி வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

மணல் கொள்ளையை தடுத்தவர் கொலையை கண்டித்து முற்றுகை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இளமனூர் கிராம மக்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளான மணல் கொள்ளையர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளரான ஆளும் கட்சிப் பிரமுகர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இளமனூர் கிராம மக்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் குற்றவாளிகளைக் கைதுசெய்யும் வரை தங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனக்  கிராம மக்கள் கூறினர். இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் கிடைத்துவரும் குறைந்த அளவு தண்ணீருக்கும் வேட்டுவைக்கும்  மணல் கொள்ளைக் கும்பலால்,  ஓர்  உயிர் பறிபோயிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.