ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம்: ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அதிகாரிகள்! | Andaman prison? Mandapam Refugee Camp: Ruling rulers of officials ...

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:32 (03/06/2019)

ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம்: ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அதிகாரிகள்!

ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம்: ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அதிகாரிகள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ண்டபம் அகதிகள் முகாம், தமிழகத்தின் அந்தமான் சிறையாகப் பார்க்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது, தமிழக ஆட்சியாளர்களின் நடவடிக்கை.

ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் தொழிலாளிகளை அழைத்துச் சென்று அடிமைகளாக வேலை வாங்கி வந்தனர். இதற்கு ஏதுவாக மண்டபத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்து, அங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பணிகளை ஆங்கிலேயர்கள் செய்துவந்தனர். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஏற்கெனவே மண்டபத்தில் இயங்கிவந்த அலுவலகம் மறுவாழ்வு முகாமாக மாற்றப்பட்டது. இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவழியினர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தில் உள்ள அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையே, இலங்கையில் நடந்த இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களும் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

மண்டபம் அகதிகள் முகாம்
1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் தீவிரமான நிலையில், அங்கே தமிழர்கள் உயிர்வாழ வழியின்றி தினந்தோறும் அகதிகளாக வரத் தொடங்கினர். இதனால் மண்டபத்தின் முகாம் நிரம்பி வழியத் தொடங்கியது. மேலும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளி அமைப்பினரும், அகதிகளுடன் முகாம்களில் தங்கியிருந்தனர். இதனால் அகதிகள் முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவத்தினால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அகதி முகாமில் தங்கியிருந்த போராளிகள் இலங்கைக்குத் தப்பிச் சென்றனர். இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில் 2001-ல் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா, தனக்குப் பிடிக்காத காவல் துறை அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரியான அலெக்‌சாண்டர் அங்கு தூக்கியடிக்கப்பட்டார். தி.மு.க ஆட்சியின்போது கோலோச்சிய ஜாபர்சேட், மண்டபத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் இங்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதேபோல் காவல் துறை உயர் அதிகாரிகளான கிருஸ்டோபர் நெல்சன், அருணாசலம், பிரமோத்குமார் ஆகியோரும் இங்கு பணியமர்த்தப்பட்டனர். ஜெயலலிதா காலத்தில் தொடங்கிய இந்த `பனிஷ்மென்ட்' நடவடிக்கை, 2009-ல் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டதால் அகதிகள் வருகையும் தடைப்பட்டு, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் பரபரப்பின்றிப்போன நிலையில், ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கை மட்டும் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 130 அகதிகள் முகாம் உள்ளன. இவற்றில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் அகதிகளாக இருந்து வருகின்றனர். மண்டபத்தில் உள்ள முகாமில் மட்டும் 1,629 பேர் தங்கியுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்கென, `இலங்கை அகதிகள் பிரிவு' (SLR teem) இயங்கிவருகிறது. இங்கு ஓர் ஆய்வாளர், ஒரு சார்பு ஆய்வாளர், நான்கு தலைமைக் காவலர்கள், இரண்டு காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் குழுவைச் சேர்ந்த 40 பேர் பணியாற்றி வருகின்றனர். இது தவிர மத்திய, மாநில உளவுப் பிரிவினைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரும் அகதிகளைக் கண்காணித்து வருகின்றனர். தற்போது உள்ள அகதிகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த எண்ணிக்கையே அதிகமானதாகும்.

மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுக்லா 
 இத்தகைய சூழலில் தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்யப்பட உள்ளோருக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த அசுதோஷ் சுக்லா மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாகத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறைத்துறைத் தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லாவை தேர்தல் பணிகளுக்கான டி.ஜி.பி-யாகத் தேர்தல் ஆணையம் நியமித்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு இடியாக இறங்கிய நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறைத்துறைத் தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லாவின் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதன் விளைவாக உப்பு சப்பில்லாத பணியிடமாகத் திகழும் மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாகத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். 

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்கு அந்தமானில் உள்ள சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் போக்கு ஆங்கிலேயர்களிடம் நிலவியது. அதைப் போன்றே மண்டபம் அகதிகள் முகாமினையும் கருதும் தமிழக ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளை அங்கு தூக்கியடித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 


டிரெண்டிங் @ விகடன்