`இரண்டாண்டுகள் விட்டுப்பிடிப்போம்!’ - ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து தி.மு.க மனநிலை | Dmk planning to remove aiadmk regime

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (03/06/2019)

கடைசி தொடர்பு:12:30 (03/06/2019)

`இரண்டாண்டுகள் விட்டுப்பிடிப்போம்!’ - ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து தி.மு.க மனநிலை

ஸ்டாலினிடம்

ஆளும் அரசின்மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்பது ஸ்டாலின் திட்டம். ஆனால் எடப்பாடியோ, மக்களவைத்தேர்தலுக்கு செலுத்திய கவனத்தைவிட இடைத்தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். `ஜூன் 3-ம் தேதி, கருணாநிதி பிறந்தநாளில் ஆட்சிக்கு முடிவுகட்டிவிடுவோம்’ என்று கூறிய ஸ்டாலினால் நடைமுறைபடுத்தமுடியவில்லை. தி.மு.க-வில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார்கள். காரணம், `இப்போதுதான் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத்தேர்தலுக்கு செலவுசெய்தோம்; இப்படியிருக்கும்போது, ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தால், எப்படி செலவு செய்யமுடியும்? கட்சியில் மீண்டும் சீட் கிடைக்குமா என்பதெல்லாம் டவுட்டுதான்’ என்று யோசிக்கின்றனர்.

எம்.எல்.ஏக்கள்

சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க வட்டாரத்தில், ``தமிழகத்திலிருக்கும் ஆட்சியை அகற்றிவிடலாம் என ஸ்டாலின் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், கட்சியினர் பல்வேறு தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். `இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே, வெயிட் பண்ணுவோம்; அப்புறம் அவங்க நினைச்சாலும் பதவிக்கு வரமுடியாது. அதற்குள் தேர்தலுக்குத் தயாராகிவிடுவோம். மத்தியில பி.ஜே.பி வந்ததால இன்னும் 2 வருடம் அவங்களுடைய திட்டம், அ.தி.மு.க-வுடைய செயல்பாடுகள் மக்களுக்கு எதிராக இருக்க வாய்ப்பு இருக்கு. அதை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்து, ஆட்சி மீதான வெறுப்பை அதிகரிப்போம்.

ஸ்டாலின்

அப்புறம் சட்டப்பேரவை தேர்தல்ல வரலாறு காணாத அளவுல அ.தி.மு.க-வுக்கு படுதோல்வி கிடைக்கும். எதிர்காலத்துல எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமப் பண்ணலாம்’ என ஆலோசனைகள் குவிகிறது. இருந்தாலும், இந்த இரண்டு ஆண்டுகள் அவர்களை விட்டால் அது நமக்கேகூட ஆபத்தாக முடிந்துவிடும். `மீண்டும் எப்படியும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால், ஆட்சி முடிவதற்குள் முடிந்த அளவு பணத்தைச் சேர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். அப்படி 2021-ல் பணபலத்துடன் அவர்கள் தேர்தலை சந்தித்தால், பணத்தை வாரியிறைத்து நமக்கு டஃப் கொடுக்கலாம் என்பதையும் ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கின்றனர். இருவேறு கருத்துகளுக்கிடையில், ஆட்சியை கலைக்கலாமா தொடரவிடலாமா என்று குழப்பத்தில் இருக்கிறது தி.மு.க தலைமை” என்று விவரித்தவர்கள்...

 ``இது ஒருபுறம் இருந்தாலும், கட்சியில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்கான வலையும் பின்னப்படுகிறது. அவர்களை இழுப்பதன்மூலம், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துக்கொண்டுவந்துவிடலாம் என்ற மாஸ்டர் பிளானும் ஒருபுறம் எக்ஸிகியூட் ஆக இருக்கிறது” என்கிறார்கள். இந்த நிலையில், எம்.எல்.ஏ-க்களை அழைத்து சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி.