ஓ.பி.எஸ். மகனோடு பா.ம.க.வுக்கும் `செக்'!- எடப்பாடியின் மூன்று ராஜதந்திரங்கள் | CM's plan to tackle OPS son and PMK

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:59 (03/06/2019)

 ஓ.பி.எஸ். மகனோடு பா.ம.க.வுக்கும் `செக்'!- எடப்பாடியின் மூன்று ராஜதந்திரங்கள்

ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கடி கொடுக்கும் கட்சியினரைச் சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மூன்று ராஜதந்திரங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

மக்களவைத் தேர்தலும் இடைத்தேர்தலும் நடந்து முடிந்த சூழ்நிலையில் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான ஜுரம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கைவசம் மூன்று ராஜ்ய சபா எம்.பி. சீட்கள் உள்ளன. அதில், கூட்டணி ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு ஒரு சீட்டை அ.தி.மு.க. கொடுக்கவேண்டும். மீதமுள்ள இரண்டு சீட்கள் கட்சியினருக்குக் கொடுக்கப்பட வேண்டும். தற்போது, ஒரு சீட்டை பா.ஜ.க. தரப்பு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தர்மசங்கடத்தில் அ.தி.மு.க. தலைமை உள்ளது. 

ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான் ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். முனுசாமி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, தம்பிதுரை, அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன்உசேன், கோகுலஇந்திரா, ஜெ.எம்.பஷீர் என அந்தப் பட்டியல் நீள்கின்றது. இதுத்தவிர பா.ஜ.க. மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி அ.தி.மு.க. தலைமையிடம் சிலர் ராஜ்ய சபா எம்.பி சீட்டைப் பெற காயை நகர்த்திவருகின்றனர். 

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``ராஜ்ய சபா எம்.பி. சீட் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்று கட்சித் தலைமையில் ஆலோசனை நடந்துவருகிறது. முன்னாள் எம்.பி, அன்வர்ராஜ், கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில், `முஸ்லிம்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், `கூட்டணிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே ராஜ்ய சபா எம்.பி சீட் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

இவரைத் தொடர்ந்து தம்பிதுரை, துணை சபாநாயகர் வரையிலான பதவியில் இருந்துள்ளேன். மேலும் கட்சியின் சீனியரான எனக்கு இந்த முறை ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கேட்டுள்ளார். இவர்களைத் தவிர ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தரப்பினர்களும் ராஜ்ய சபா சீட் கேட்டுவருகின்றனர். இதில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறோம். 

இதற்கிடையில் பா.ஜ.க. தரப்பிலிருந்து ஒரு ராஜ்ய சபா சீட் கேட்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை தமிழக ராஜ்ய சபாவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் பா.ஜ.க. உள்ளது. அவ்வாறு பா.ஜ.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்தால் இரண்டு அமைச்சர் பதவி தருவதாகவும் பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அமைச்சர் பதவியா இல்லை கட்சியினருக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட்களா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க. தலைமை உள்ளது. 

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இந்தச் சமயத்தில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும். பா.ம.க.வுக்கு ஒரு சீட், பா.ஜ.கவுக்கு ஒரு சீட் கொடுத்துவிட்டால் அ.தி.மு.க.வுக்கு ஒரு சீட் மட்டுமே இருக்கும். அதை யாருக்குக் கொடுத்தாலும் கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்படும். எனவே இந்தப் பிரச்னையை ராஜதந்திரியாக இருந்து செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்" என்றார். 

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``டெல்லி லாபியை முதல்வர், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் செய்துவருகிறார். இந்தச் சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், டெல்லியில் அமைச்சராகிவிட்டால் டெல்லியில் அந்தத் தரப்பினரின் செல்வாக்கு உயர்ந்துவிடும். இதனால்தான் யோசித்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். பா.ஜ.க. தரப்பிலிருந்து ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ராஜ்ய சபா சீட் கொடுத்தால் இரண்டு இணை அமைச்சர் பதவிகள் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர் பதவிகளில் ஒன்று ரவீந்திரநாத் குமாருக்கும் இன்னொன்று முதல்வரின் தீவிர ஆதரவாளர் ஒருவருக்கும் கொடுக்கப்பட்டாலும் டெல்லியில் எங்கள் தரப்பு செல்வாக்கு குறைந்துவிடும்.

டெல்லியில் அமைச்சர் பதவியைப் பெறாமல் எங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட்டைக் கொடுக்கலாம் என்று ஆலோசித்துவருகிறோம். அதன்மூலம் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் வழிவகுக்க முடியும். பா.ம.க.வுக்கு ஜெயலலிதா பாணியில் இந்த முறை ராஜ்ய சபா எம்.பி சீட் கொடுக்காமல் தவிர்ப்பது தொடர்பாகவும் பேசி வருகிறோம். இது, நிறைவேறிவிட்டால் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிடலாம். இதுதான் எங்களின் மூன்று ராஜதந்திரங்கள். பா.ம.க.வுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட்டுக்குப்பதிலாக உள்ளாட்சியில் இரண்டு மேயர் பதவிகளை கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. இதற்கிடையில் தே.மு.தி.க. தரப்பிலிருந்தும் ராஜ்ய சபா சீட் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் யோசித்து முடிவெடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்" என்றனர். 

 எடப்பாடி பழனிசாமியிடம் எம்.பி சீட் கேட்கும் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``தமிழகத்தில் அ.தி.மு.க.வில் உள்ள ஒரே லோக் சபா எம்.பி. ரவீந்திரநாத் குமார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பா.ஜ.க. மேலிடம் தயாராக இருந்தபோதிலும் சிலரால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. தற்போது பா.ஜ.க. வைக்கும் கோரிக்கையை அ.தி.மு.க. நிறைவேற்றினால் இரண்டு இணை அமைச்சர் பதவி கிடைக்கும். ஆனால் அதையும் பெற கட்சியின் சிலர் விரும்பவில்லை. இதே நிலை நீடித்தால் கட்சிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்படும். பா.ஜ.க.வுடன் சுமுக உறவு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியை நீட்டிக்க முடியும். மத்திய அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் யானை தன் தலையில் மண்வாரி போட்ட நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுவிடும்" என்றனர். 

பா.ஜ.க. தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கரின் பூர்வீகம் தமிழகம். இதனால்தான் அவரை தமிழக ராஜ்ய சபா எம்.பியாக தேர்வு செய்வது தொடர்பாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து அவர் தேர்வு செய்யப்படவில்லையென்றாலும் வேறு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பியாக அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார். 

பா.ம.க.வினரிடம் கேட்டதற்கு, ``கூட்டணிக் கட்சி ஒப்பந்தத்தை அ.தி.மு.க. கண்டிப்பாக நிறைவேற்றும் என நம்புகிறோம். அன்புமணி ராமதாஸ் நிச்சயம் ராஜ்ய சபா எம்.பியாக டெல்லி செல்வார். அ.தி.மு.க. தரப்பிலிருந்து எங்களுக்கு பாசிட்டிவான பதில்களே வருகின்றன. ஆனால், இடையில் இருப்பவர்கள்தான் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பிவருகின்றனர்" என்றனர்.