”சபாநாயகர் பதவி கிடைக்கல!”- புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் நடத்திய ரணகளம் | Congress MLA's supporters protest in Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:00 (03/06/2019)

”சபாநாயகர் பதவி கிடைக்கல!”- புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் நடத்திய ரணகளம்

சபாநாயகர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நடத்திய போராட்டத்தால் ரணகளமானது புதுச்சேரி சட்டப்பேரவை.

சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், தனது பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்து, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். புதிய சபாநாயகரை உடனே தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த சட்டப்பேரவை செயலகம், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க, பி.ஜே.பி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள், தேர்தலுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கும், தலைமைச் செயலருக்கும் புகார் அனுப்பின.

புதுச்சேரி சட்டப்பேரவை

இதற்கிடையில், நேற்று சபாநாயகரைத் தேர்வுசெய்வதற்காக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,  காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்றனர். அப்போது துணை சபாநாயகராக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவக்கொழுந்தை சபாநாயகர் முன் மொழிந்தார்.

லட்சுமி நாராயணன்

சிவக்கொழுந்தைத் தவிர யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், சபாநாயகராக போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார். அதேபோல “போதுமான கால அவகாசம் கொடுத்து தேர்தலை நடத்தாமல், தோல்வி பயத்தில் விதிகளை மீறி சபாநாயகர் தேர்தலை நடத்துகிறார் முதல்வர் நாராயணசாமி” என்று அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவரும் எம்.எல்.ஏ-வுமான அன்பழகன் தெரிவித்திருந்தார்.

நாராயணசாமி

இன்று கூடிய சட்டப்பேரவையில், சபாநாயகராகப் பதவி ஏற்றுக்கொண்டார், சிவக்கொழுந்து. ஆனால், அ.தி.மு.க, பி.ஜே.பி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தைப் புறக்கணித்தன. இது ஒருபுறமிருக்க, 2 முறை அமைச்சராக இருந்து தற்போது முதல்வரின் நாடாளுமன்றச் செயலராகப் பதவி வகித்துவரும், ராஜ்பவன் தொகுதியின் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனுக்குச் சபாநாயகர் பதவி வழங்கப்படாததால், அவரும் அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனால் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், அதன்பிறகு நடைபெற்ற வேட்பு மனு தாக்கலிலும் பங்கெடுக்காமல் புறக்கணித்தார்.

அமைச்சர் கந்தசாமி

அதேபோல, இன்று நடைபெற்ற சபாநாயகர் பதவி ஏற்பு விழாவிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தார். தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை முன் அமர்ந்த லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள், அவருக்குப் பதவி வழங்காததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், லட்சுமி நாராயணனின் அரசு வாகனத்தையும் சட்டப்பேரவைச் செயலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பேரவைக்குள் சென்ற அவர்கள், அமைச்சர் கந்தசாமி மற்றும் முதல்வர் நாராயணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சபாநாயார் சிவக்கொழுந்து, கடந்த 2016 தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க