Hindi: அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது; இந்தி தேவையா?! - பிரின்ஸ் கஜேந்திரபாபு | Prince Gajendra Babu and Ragavan talk about Hindi education

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (03/06/2019)

கடைசி தொடர்பு:20:44 (03/06/2019)

``அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது; இந்தி தேவையா?!'' - பிரின்ஸ் கஜேந்திரபாபு

"இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்திக்கு நாங்கள் எதிரானவர்களும் இல்லை. தலைமுறை தலைமுறையாகப் பின்தங்கிய நிலையிலிருந்து இப்போதுதான் கல்வி கற்க எங்கள் ஏழைக் குழந்தைகள் பலரும் அரசுப் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தாய் மொழி வழியிலேயே சரிவிகித கல்வி கிடைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது."

``அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது; இந்தி தேவையா?!''  - பிரின்ஸ் கஜேந்திரபாபு

`இந்தி மொழி பேசாத மாநிலங்களில், அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிற மாநில மொழி ஒன்றைக் கட்டாயமாக்க வேண்டும்' என்று பரிந்துரைத்துள்ளது, கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை. இந்த அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கும் எண்ணத்துக்கு எதிராகத் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பெரும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. இதனால், திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்ளை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், `தமிழகம் உட்பட பிற மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாகப் பயில வேண்டிய அவசியமில்லை. மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம்' எனக் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

மும்மொழி கொள்கை

``அரசின் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்குத் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இருக்கிறதா... ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து இரண்டாம்நிலை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பாடம் நடத்தவேண்டிய நிலைதான் இருக்கிறது. அதிலும் அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எங்கள் மாநில ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிடுத்து, எங்கள் பள்ளியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தி ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றி யோசிப்பது ஏன்? கற்றல் வாய்ப்பினைச் சமமாக்கிவிட்டுதானே மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கவேண்டும்; முயல வேண்டும். அதைவிடுத்து, கற்றல் வாய்ப்பினைச் சமமாக்குவது பற்றிய விவாதங்கள் குறித்தோ அல்லது அதைப் பற்றிப் பேசுவதற்குக்கூடத் தயாராக இல்லாத நிலையில் புதிதாக ஒரு மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி அரசு முடிவெடுப்பது ஏன்?

`கல்வியை அடிப்படை உரிமையாக்குவதற்கு அரசுக்குப் பொருளாதார வசதி இல்லை' என இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது அப்போதைய மத்திய அரசு சொன்னது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 41-ம் படி, `பொருளாதாரம் வளர வளர அதற்குத் தகுந்தாற்போல் கல்வியை அடிப்படை உரிமையாக்குவோம்' எனவும் அரசு கூறியிருந்தது. கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவேயில்லையா... மாறாகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தால், கல்வி உரிமையைக் கட்டாயமாக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதற்கு மாறாக அரசு நடந்துகொள்வது ஏன்... `அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி செய்வோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகும் அதற்கு எதிராக நடந்துகொள்ளும் ஆட்சியாளர்களின் தவற்றை யார் சுட்டிக்காட்டுவது..." என்று அழுத்தமாகக் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

கற்றல் சமவாய்ப்பு பற்றிக் கேள்வி எழுப்பும் கஜேந்திரபாபு, ``மத்திய அரசின் கேபினட் அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலாளர் பேரன், பேத்திகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்? அந்தப் பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? இது ஓர் உதாரணக் கேள்விதான். இந்த வசதி வாய்ப்புகளெல்லாம் அரசுப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் இருக்கிறதா... இல்லையென்றால், எல்லாப் பள்ளிகளிலும் சரிவிகித கல்வித் தரத்தை உறுதிப்படுத்துவதுதானே அரசின் முதல் வேலை. அதைப் பற்றி விவாதிக்கவே மாட்டோம் என்று அரசு சொல்வதன் பின்னணியில் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன?

இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்திக்கு நாங்கள் எதிரானவர்களும் இல்லை. தலைமுறை தலைமுறையாகப் பின்தங்கிய நிலையிலிருந்து இப்போதுதான் கல்வி கற்க எங்கள் ஏழைக் குழந்தைகள் பலரும் அரசுப் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தாய் மொழி வழியிலேயே சரிவிகித கல்வி கிடைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், எங்கள் குழந்தைகளுக்கு இந்தியைத் திணிக்கவேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மாறாகத் திணிப்போம் என்றால், மும்மொழிகளையும் கற்றுக்கொள்ள அதற்குத் தகுந்த வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுப்பதுடன், கற்றல் வாய்ப்பைச் சமமாக்க வேண்டும்.

மும்மொழி கொள்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்கெனவே இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அப்பள்ளியில் ஏழைச் சாமானியரின் பிள்ளைகளும் படிக்கிறார்களா... இல்லவேயில்லை! எனவேதான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் ஏழைப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி, சரிவிகித கல்வி பயிலும் சூழலை முதலில் ஏற்படுத்திக்கொடுங்கள் என்கிறோம். இந்தி மொழியைக் கற்க விரும்புபவர்கள், இந்தி பிரசார சபாவில் கற்றுக்கொள்ளட்டுமே. அதை யாரும் தடுக்கப்போவதில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வட இந்தியர்கள் பெரும்பாலானோர், கூலி வேலைக்காகத் தமிழகத்திற்கு வருகிறார்களே. ஏன் வருகிறார்கள்.. அரசிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது... இந்தி அல்லது விருப்ப மொழி ஒன்றைக் கூடுதலாகக் கற்றுக்கொள்வதால், எங்கள் குழந்தைகளுக்கும் மொழித் திறன் அதிகரிக்கும். நல்லதுதான். ஆனால், காலம் காலமாக எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றல் சம வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரசுக்குக் காழ்ப்புணர்ச்சி இருப்பதால், இதுவே மிகப்பெரிய அரசியலாக இருக்கிறது. இந்நிலையை முதலில் மாற்றுங்கள். பிறகு மும்மொழி என்ன, நான்கு மொழிக் கொள்கையைக்கூட அமல்படுத்தலாம்" என்று உறுதியாகக் கூறுகிறார்.

கே.டி.ராகவன்மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``எந்த மொழியையும் நாங்கள் திணிப்பதில்லை. இன்று போட்டிகள் நிறைந்த சூழலில், பல மொழிகளைக் கற்றுக்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். அதற்காகப் பலரும் கட்டணம் செலுத்தி இந்திப் படிக்கிறார்கள். ஆனால், ஏழை மாணவர்களால் எப்படிக் கட்டணம் செலுத்தி இந்திப் படிக்க முடியும்? எனவே, நாங்கள் அரசுப் பள்ளியில் இந்தியை இலவச கல்வியாகக் கொடுக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் செய்யும் எல்லா விஷயங்களையும் அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தையும் பெரிதுபடுத்துகின்றனர். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் நடத்துகிற பள்ளிகளில், முதல் மொழி ஆங்கிலமும் மூன்றாவது மொழியாக இந்தியும் இருக்கிறது. இதை அவர்கள் மறுப்பார்களா? இந்தியை எதிர்க்கும் தி.மு.க உள்ளிட்ட அரசியல்வாதிகள் தமிழ் மக்களைப் போலித்தனத்துடன் ஏமாற்றுகிறார்கள். தமிழகத்தில் மாநில அரசே நடத்தும் உருதுப் பள்ளிகள் இருக்கின்றன. அதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்காதது ஏன்?

எந்த மொழியையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரு மாணவர் புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் அதற்கான ஏற்பாடு தயாராக இருக்கவேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போது கஸ்தூரி ரங்கன் குழு வெறும் அறிக்கையைத்தான் கொடுத்திருக்கிறது. அதுகுறித்து யார் வேண்டுமானாலும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம்; கருத்து சொல்லலாம். அதைவிடுத்து ஒரு விஷயத்தை மக்களிடம் முழுமையாகக் கொண்டுசெல்லாமல், தங்கள் அரசியல் லாபத்துக்காக தி.மு.க உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் சுயநலத்துடன் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்