`இது அழகிய தீர்வு!’ - புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் | a.r.rahman tweet regarding new education policy

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:45 (03/06/2019)

`இது அழகிய தீர்வு!’ - புதிய கல்விக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தி திணிப்புக்கு எதிரான கண்டனக்குரல்கள் தமிழகத்தில் வலுவாக முன்வைக்கப்படும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான்

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்தக் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்தப் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கொண்டுவர பரிந்துரைத்துள்ளது.

ஜெய்சங்கர்

அதில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது, தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக #StopHindiImposition என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் டிரெண்டானது. `மீண்டுமொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் முன்னெடுக்கும்’ என்று பலரும் கருத்துகளை முன்வைத்தனர்.

நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``மத்திய அரசு மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே கல்விக் குழுவின் வரைவை முன்னெடுத்துச் செல்லும். அரசு, அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” என்று பதிவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில், `மத்திய அரசு, மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” என்றார்.

இந்நிலையில், மும்மொழி கல்வித்திட்டம் கட்டாயமில்லை என்று புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை திருத்தப்பட்டது. இது தொடர்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் ட்விட்டரில், ``அழகிய தீர்வு ” தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” என்று பதிவிட்டுள்ளார்.