`60 கிலோ பூக்கள்; கருணாநிதியின் பேனா, ஃபீனிக்ஸ் பறவை!' - யார் இந்தப் பூக்கடை வெங்கடேசன்? | Everyday karunanidhi memorial decoration with 60kg flowers

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (03/06/2019)

கடைசி தொடர்பு:17:30 (03/06/2019)

`60 கிலோ பூக்கள்; கருணாநிதியின் பேனா, ஃபீனிக்ஸ் பறவை!' - யார் இந்தப் பூக்கடை வெங்கடேசன்?

ஒவ்வொரு வருடமும் ஜூன் 3-ம் தேதி வரப்போகிறது என்றால் தி.மு.க-வினருக்குக் கொண்டாட்டம்தான். ஏனெனில், அன்று கருணாநிதியின் பிறந்தநாள். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பிறந்தநாள் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும். தோரணங்கள், பூக்கள், இலைகள் ஆகியவற்றால் கோபாலபுரம் வீடும் சி.ஐ.டி காலனி வீடும் நிறைந்து காணப்படும். தலைவர்கள் வருகை, உடன்பிறப்புகளின் உற்சாகம் எனக் கோபாலபுரமே திணறிப்போகும். 

கருணாநிதி

இன்று ஜூன் 3-ம் தேதி. கருணாநிதி இல்லாததால் தி.மு.க தொண்டர்கள் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை. கோபாலபுரம் வீட்டில் விழா ஏற்பாடுகள் இல்லை. அவர் இறந்த பின்பு வரும் முதல் பிறந்த நாள் என்பதால் அறிவாலயத்துக்கு வருகை தந்தபடியே இருக்கின்றனர் உடன்பிறப்புகள். இன்று காலை அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று ஸ்டாலினும் தி.மு.க நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி பிறந்தநாள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவோடு இன்றைய பிறந்தநாள் விழா நிறைவடைய உள்ளது. 

அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்

இதில், சிறப்பு என்னவென்றால் முன்னதாகக் கோபாலபுரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள் தற்போது கருணாநிதியின் நினைவிடத்தில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கருணாநிதியின் நினைவிடம் பூக்களால் நிரம்பி வழிகிறது. இன்று ஃபீனிக்ஸ் பறவை மற்றும் குழந்தையின் மாதிரி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. `ஃபீனிக்ஸ் பறவையைப்போல் கருணாநிதி மீண்டெழுவார்' என்பதைக் குறிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. 

அலங்காரங்களுடன் பூக்கடை வெங்கடேசன்

இப்படியொரு அலங்கார வடிவமைப்புக்குச் சொந்தக்காரர் பூக்கடை வெங்கடேசன். அவரிடம் பேசினோம். ``நான் பாரிமுனையில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கலைஞர் சமாதியில் தினமும் அலங்காரம் செய்து வருகிறேன். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபுவின் மேற்பார்வையில் இதைச் செய்து வருகிறோம். கருணாநிதி இறந்த பிறகு, அவர் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் நாங்கள்தான் பூக்களைக் கொடுத்தோம். அதிலிருந்து தொடர்ந்து அவரது சமாதியிலும் பூ அலங்காரம் செய்து வருகிறோம். 

ஸ்டாலினுடன் வெங்கடேசன்

பெங்களூரு, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து அதிகாலை 4 மணிக்கெல்லாம் பூக்கள் வந்துவிடும். அதன் பிறகு, 5.30 மணிக்கு எங்கள் வேலையைத் தொடங்குவோம். மக்கள் கூட்டம் வருவதற்குள் அதாவது 8 மணிக்கெல்லாம் எங்கள் வேலையை முடித்துவிடுவோம். ஒரு நாளுக்கு 60 கிலோ பூக்கள் வரும். விஷேச தினம் என்றால் இன்னும் அதிகமாக வரும். சாதாரண நாள்களில் நாங்கள் எட்டு பேர் வேலை செய்வோம் அதுவே, விஷேச நாள் என்றால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அலங்காரம் செய்வோம். 

அலங்காரங்களுடன் பூக்கடை வெங்கடேசன்

பெரும்பாலும் பூக்களின் வடிவமைப்பை நாங்களேதான் பார்த்துக்கொள்வோம். தீபாவளி, பொங்கல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வருகை போன்ற சிறப்பு நாள்களில் அண்ணன் சேகர்பாபு ஆலோசனை வழங்குவார். அன்றைய அலங்காரத்தின் ஏற்பாடுகள் மட்டும் முந்தைய நாளே தொடங்கிவிடும். தினமும் 15,000 ரூபாய் மதிப்புள்ள பூக்கள் வரும். ஒவ்வொரு நாளும் நாங்கள் அலங்காரத்தை மாற்றிக்கொண்டே இருப்போம். சேகர்பாபு ஒருநாள் என்னைத் தலைவர் ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தினார். அவர் என்னைப் பார்த்து பூ அலங்காரத்துக்காக வெகுவாகப் பாராட்டினார். அங்கு வரும் மக்களும் இந்த அலங்காரங்கள் சிறப்பாக இருப்பதாக எங்களிடம் கூறுவார்கள். ஒரு மாபெரும் தலைவரின் சமாதியை அலங்கரிப்பதை மாபெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்" என்றார் நெகிழ்ச்சியோடு. 

இவரின் பூ அலங்காரம் பற்றிய உங்கள் கருத்தை கமென்டில் பதிவிடுங்கள் மக்களே!