`வாலிபர் கொலை; உயிருக்குப் போராடும் பெண்!'- தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்   | Women and an youngster were brutally attacked in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (03/06/2019)

கடைசி தொடர்பு:15:37 (03/06/2019)

`வாலிபர் கொலை; உயிருக்குப் போராடும் பெண்!'- தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்  

சென்னை கண்ணகிநகர் பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டு வாசலில் அதிக சத்தம் கேட்டதும் வெளியில் வந்தார். வாகனங்களை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்ட அந்தப் பெண், கத்தியால் குத்தப்பட்டார். பெண்ணைத் தொடர்ந்து, தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட வாலிபர் ஒருவரும் கொலை செய்யப்பட்டார். 

  சதீஷை கொலை செய்த வழக்கில் கைதானவர்


சென்னை எழில்நகர், குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு, 95வது பிளாக்கில் குடியிருப்பவர் மகாலட்சுமி (38). கடந்த 31.5.2019-ம் தேதி இரவு 10.30 மணியளவில் மகாலட்சுமி வீட்டின் வாசலில் அதிக சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தார் மகாலட்சுமி. அப்போது, குடிபோதையிலிருந்த இரண்டு பேர், வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த மகாலட்சுமி, `ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஒருவர், கத்தியால் மகாலட்சுமியை குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதைப்பார்த்ததும் குடிபோதையிலிருந்த இருவர் தப்பி ஓடினர். இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களின் உதவியோடு மகாலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 சதீஷை கொலை செய்த வழக்கில் கைதானவர்

மகாலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய போதைக் கும்பல் சதீஷ் என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளது. போதைக் கும்பலை தட்டிக் கேட்ட சதீஷையும் சரமாரியாக அவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் பலியானார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக கண்ணகி நகரைச் சேர்ந்த விஜய், சுதாகர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர். சுதாகர் மீது 2 கொலை வழக்கு உட்பட 3 வழக்குகள் கிண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா போதைக்கு ஏராளமானவர்கள் அடிமையாகி வருகின்றனர். போதை ஏறியதும் அவர்களின் பாதை மாறிவிடுகிறது. சம்பவத்தன்று ஒரு கும்பல் போதையில் அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளளனர். அதைத் தட்டிக் கேட்ட சதீஷ், மகாலட்சுமி ஆகியோரை போதைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சதீஷ் இறந்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மகாலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். 

கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா போதை பழக்கத்தை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், இங்குள்ளவர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. கண்ணகி நகர் என்றாலே தினமும் ஒரு பஞ்சாயத்து என்ற சூழல் நிலவுகிறது. மேலும், சென்னை நகரப்பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களின் சிலருக்கு கண்ணகி நகர் பகுதிதான் புகலிடமாக உள்ளது. எனவே, கண்ணகி நகர் பகுதி  24 மணி நேரமும் எங்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறது" என்றனர். 

  சதீஷை கொலை செய்த வழக்கில் கைதானவர்

கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது. அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளும் கஞ்சா கும்பலுடன் டீலிங்கில் உள்ளனர். இதனால்தான் கண்ணகி நகர் பகுதியில் கஞ்சாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பணிபுரிய காவல்துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. 

கண்ணகிநகர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்களுக்கு டிரைவிங் பயிற்சி, மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு வழிகாட்டும் பயிற்சியோடு விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். தற்போது அவர், கண்ணகி நகர் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். சிவக்குமாரைப் போன்ற மனிதநேய மிக்க இன்ஸ்பெக்டர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் கண்ணகி நகர் மக்கள்.