கிரிக்கெட் கிட்; கால்பந்து; ஸ்போர்ட்ஸ் ஷூ - தெருவோர சாதனைச் சிறுவர்களை நெகிழ வைத்த ஐ.ஏ.எஸ் #savestreetchildren | street children won international cricket trophy

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (03/06/2019)

கடைசி தொடர்பு:16:15 (03/06/2019)

கிரிக்கெட் கிட்; கால்பந்து; ஸ்போர்ட்ஸ் ஷூ - தெருவோர சாதனைச் சிறுவர்களை நெகிழ வைத்த ஐ.ஏ.எஸ் #savestreetchildren

கடந்த மாதம் தமிழக மாணவர்கள் சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தினர். ஆம், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று கோப்பையை வென்று அசத்தியுள்ளனர். இந்த நிகழ்வு பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் விளையாடியது தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.

கோப்பையுடன் சிறுவர்கள்

மொத்தம் எட்டு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டனர். வட இந்திய அணி, தென்னிந்திய அணி என இரு அணிகள் இந்தியா சார்பாக பங்கேற்றனர். தமிழகம் சார்பாக பால்ராஜ், சூர்யா என்ற மாணவர்களும், மோனிஷா, நாகலக்ஷ்மி என்ற மாணவிகளும் கலந்துகொண்டனர். இவர்கள் சென்னையில் உள்ள கருணாலயா என்ற அமைப்பின் மூலம் லண்டன் சென்றனர். 

பாராட்டு விழா

இந்தச் சிறுவர்களின் வெற்றியைப் பற்றி அறிந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி உதவியுள்ளார். நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் என்ற அமைப்பு நடத்தும் ஐ.ஏ.எஸ் மாணவர்கள் பயிற்சியின் தொடக்க விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாலச்சந்திரன், லண்டனில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஹெல்மெட் போன்ற முழு கிரிக்கெட் கிட்டுடன் 5000 ரூபாயும் வழங்கினார். இவர்கள் மட்டுமல்லாது மேலும், 20 சிறுவர்களுக்கு கால் பந்து, ஷூ போன்றவற்றை வழங்கினார். 

பாராட்டு விழா

இது பற்றி நம்மிடம் பேசிய பாலச்சந்திரன்,  ``லண்டனில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நம் தமிழக சிறுவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இதைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய நினைத்தே இதைச் செய்தேன். சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்  உங்களால் செய்ய முடியுமா எனக் கேட்டார்கள். பணமா முக்கியம் மாணவர்களின் மகிழ்ச்சிதானே முக்கியம். நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ் படிக்க பயிற்சி பெறும் மாணவர்களும் வந்திருந்தனர். அப்போது நான் தெருவோர குழந்தைகளைப் பார்த்து, ` வருங்காலத்தில் நீங்களும் இவர்களைப் போல் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டியது எனது விருப்பம். அப்படி நீங்கள் படித்தால் எத்தனை பேர் படிக்கிறீர்களோ அவர்களின் கல்விச் செலவை நான் ஏற்கிறேன் எனக் கூறினேன். அப்போது குறுக்கிட்ட கிங் மேக்கர்ஸ் அமைப்பின் பூமிநாதன். உங்களுக்குச் சிரமம் வேண்டாம் சார் நாங்கள் அதைப் பார்த்துக்கொள்கிறோம்’ எனக் கூறினார். தெருவோர சிறுவர்களுக்கு உதவி செய்ய பலர் உள்ளனர். அவர்களின் வாழ்வில் மாற்றம் வர வேண்டும்” என்றார் நெகிழ்ச்சியோடு.. !