கடிதம் எழுதிய ஜாங்கிட்; அடுத்த டி.ஜி.பி யார்? - ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்ற பின்னணி  | The Reason behind the IPS officers transfers

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:12 (03/06/2019)

கடிதம் எழுதிய ஜாங்கிட்; அடுத்த டி.ஜி.பி யார்? - ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்ற பின்னணி 

டி.ஜி.பி.ராஜேந்திரன்

பணி ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் டி.ஜி.பி. ஜாங்கிட் சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னணியில் அவர் எழுதிய 5 பக்க கடிதமே காரணம் என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். 

தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் பணியாற்றும் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இடமாறுதல் உத்தரவுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி சீனியாரிட்டி பட்டியலிருக்கும் ஜாங்கிட், சென்னையிலிருந்து கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் டி.ஜி.பியாக பணியாற்றிய அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களைத் தொடர்ந்து 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஒவ்வொரு காரணத்துக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து தமிழக டி.ஜி.பி. அலுவலக நிர்வாகப் பிரிவில் பணியாற்றுபவர்கள் கூறுகையில், ``தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியைப் பெற ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் இந்தப்பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். அந்தவகையில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்த ராமானுஜம், ராஜேந்திரன் ஆகியோர் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பியாக பணியமர்த்தப்பட்டார்கள். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக திரிபாதியும் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீண்ட காலமாக இருந்தனர். இந்த நான்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும்தான் முக்கியப் பதவிகள், பொறுப்புகளை ஜெயலலிதா கொடுத்துவந்தார். 

 ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்கள். அப்போது, டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது சர்ச்சைகள் எழுந்தபோதிலும் அவர் அதே பதவியில் நீடித்தார். 1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜ் அதிகாரியான டி.கே.ராஜேந்திரன், 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற வேண்டும். ஆனால், சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. பதவி வழங்கப்பட்டதோடு அவருக்கு இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அதன்படி இந்த மாதம் (ஜூன்) ராஜேந்திரன் ஓய்வு பெற உள்ளார். 

அடுத்த டி.ஜி.பி. யார் என்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி சீனியாரிட்டி பட்டியலில் உள்ள டி.ஜி.பி-க்கள் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சீனியரான ஜாங்கிட், ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். தற்போது 6 மாத பணிக்காலம் இருந்தாலே டி.ஜி.பி-யாக நியமிக்கப்படலாம் என்ற உத்தரவு திரிபாதிக்கு ப்ளஸ்ஸாக உள்ளது. ஜாங்கிட்டுக்கு அடுத்தபடியாக டி.ஜி.பி.காந்திராஜன், அக்டோபர் மாதம் ஓய்வுபெற உள்ளார். இதனால் இவருக்கும் சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி. பதவி கிடைக்க வாய்ப்பில்லை. 

 ஜாங்கிட்

அடுத்தபடியாக திரிபாதி, 2020 மே மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். இவர், ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடித்தவர் என்பதால் அடுத்த டி.ஜி.பி பதவி திரிபாதிக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் திரிபாதிக்கு இரண்டாண்டுகள் பணிக்காலம் இல்லை. இதனால் அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் இருக்கும் டி.ஜி.பி-க்கள் ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, எம்.கே.ஜா, தமிழ்செல்வன், ஆசிஸ் பெங்க்ரா, சைலேந்திரபாபு, கரன்சின்கா, பிரதீப்வி பிலிப், விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். 

இவர்களில் ஒருவர் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில் ஜாபர் சேட் மீது நிலுவையில் இருந்த வழக்குகள் அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சேட் அடுத்த டி.ஜி.பி என்ற தகவல் பரவியது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோலோச்சியவர். டேப் உரையாடல் சர்ச்சையில் சிக்கியவர். தற்போது தி.மு.க-வுடன் ஜாபர் சேட்டுக்கு அதிக நெருக்கம் இல்லை என்றாலும் அ.தி.மு.க-வில் அவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், அதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை.  ஜாபர் சேட்டுக்கு சட்டரீதியாகவும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

  டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ்

அடுத்த டி.ஜி.பி. யார் என்ற ரேஸில் இருந்தவர்களில் சிலர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜாங்கிட், கடந்த 17.5.2019-ல் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு எழுதிய 5 பக்க கடிதமும் இடமாற்றத்துக்கு ஒரு காரணம். அந்தக் கடிதத்தில் அவர் சில உண்மைகளை ஓப்பனாக எழுதியிருந்தார். நாள்கணக்கில் மட்டுமே ஜாங்கிட்டுக்கு பணிக்காலம் உள்ளது. இந்தச்சமயத்தில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விருப்ப ஓய்வு பெறலாமா என்ற ஆலோசனையில் ஜாங்கிட் இருந்துவருகிறார். 

தேர்தல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா, தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட சில காக்கிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். தேர்தல் முடிவும் ஆளுங்கட்சிக்குப் பாதகமாக அமைந்ததால் உடனே அசுதோஷ் சுக்லாவுக்கு டம்மி போஸ்ட் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு டி.ஜி.பியாக இருந்த விஜயகுமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. அதாவது, ஆளுங்கட்சியினர் மீது எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்களை கொடுத்துள்ளனர். அந்தப் புகார் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள சூழலில்தான் விஜயகுமார் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார். போலி ஆவண விவகாரத்தில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரைக் கண்ணன், தலைமையக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முருகன், பொருளாதார குற்றப்பிரிவு ஜஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாறுதல் உத்தரவு பலருக்கு வருத்தத்தையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது" என்றனர்.