`தான் பணியாற்றும் அரசுப்பள்ளியில் 3 பிள்ளைகளையும் சேர்த்தார்!'- வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர் | government school teacher's service

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (03/06/2019)

கடைசி தொடர்பு:16:45 (03/06/2019)

`தான் பணியாற்றும் அரசுப்பள்ளியில் 3 பிள்ளைகளையும் சேர்த்தார்!'- வழிகாட்டியாகத் திகழும் ஆசிரியர்

தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த ஆசிரியர் நல்லமுத்து

நீலகிரி மாவட்டம், அவ்வூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் நல்லமுத்து தன் மூன்று குழந்தைகளையும் அதே பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவித்து முன்மாதிரியாக உள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கியது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே போகிறது. இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை மந்தமாகவே நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பெற்றோர்களிடம் அரசுப்பள்ளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் மூன்று குழந்தைகளையும் தான் பணியாற்றும் அதே பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்து முன் மாதிரியாக விளங்கிவருகிறார்.

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை அடுத்துள்ள அவ்வூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 5-ம் வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் முதல் தலைமுறை மாணவர்களே பயின்று வருகின்றனர். மற்ற தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தப் பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது கேரம், செஸ், பறையிசை, சிலம்பம், ஓவியம், பேச்சு என அசத்தி வருகின்றனர்.

இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் நல்லமுத்து இன்று தலைமை ஆசிரியர் முன்னிலையில் தன் மகனை முதல் வகுப்பில் சேர்த்தார். இது குறித்து ஆசிரியர் நல்லமுத்து கூறுகையில், ``நான் அவ்வூர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். பெற்றோர்கள் அரசுப் பள்ளி மீது நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். எனவே, என் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்து என் முதல் மகனை 1 முதல் 5 வரை இதே பள்ளியில் படிக்க வைத்தேன். என் மகள் பாரதி இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இன்றைக்கு என் மகன் வினோ முதல் வகுப்பில் சேர்ந்துள்ளான். இதனால் இந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்கள் அதிகம் பேர் தனியார் பள்ளியை நாடாமல் எங்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.