`விளையாட்டா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சேன்!'- ரெண்டு வயதில் சாதனை படைக்கும் சிறுவன் | Tamilnadu boy achieves a record in memory power

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (03/06/2019)

கடைசி தொடர்பு:17:35 (03/06/2019)

`விளையாட்டா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சேன்!'- ரெண்டு வயதில் சாதனை படைக்கும் சிறுவன்

தன் குழந்தை எந்தத் துறையிலாவது சாதனை படைக்க வேண்டும் என்பது எல்லா அம்மாக்களுக்குமான கனவாக இருக்கும். அப்படியொரு அம்மாவின் கனவுதான் இரண்டு வயதுக் குழந்தை ஹஸ்வ ப்ரணவின் இரண்டு உலக சாதனைகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. 29 மாநிலங்களின் தலைநகரங்களையும் எந்த வரிசையில் கேட்டாலும் 48 விநாடிகளில் சொல்லி முடித்தும் இரண்டரை வயதில்  `வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ள ப்ரணவ் அம்மா வைஷ்ணவியிடம் பேசினோம்.

சிறுவன் ப்ரணவ்

 

``எங்க சொந்த ஊர் ராமேஸ்வரம். ப்ரணவுக்கு மூணு வயசு ஆகப்போகுது, இன்னும் ஸ்கூல்ல சேர்க்கல. இப்போதைக்கு வீட்டுல இருந்தே பாடங்களை கத்துக்கிட்டு இருக்கார். நான் ப்ளஸ் டூ வரைதான் படிச்சிருக்கேன். ஆனால், என்னோட குழந்தைக்கு சின்னச் சின்ன விஷயங்களை எப்படி கத்துக்கொடுக்கலாம்னு தினமும் புதுசு புதுசா எதாவது ஒரு வழிமுறையைக் கண்டுபிடிச்சு சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன். ஆன்லைன் பார்த்தும் கத்துட்டிருக்கேன். வீடு முழுக்க கலர் சார்ட்டுகளில் படங்களை ஒட்டி அதன் மூலம் ப்ரணவுக்கு விளையாட்டா சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆனால், இப்போ 75 திருக்குறள், கண்டங்கள், நாடுகளின் தலைநகரங்கள், திசைகள், ஐவகை நிலங்கள், 200 பொது அறிவு வினாக்கள் என நீங்கள் கேட்கும் எல்லா கேள்விக்கும் ப்ரணவால் பதில் சொல்ல முடியும். யோகாவும் கத்துக்கிட்டு சாதனை படைக்க ஆரம்பிச்சுருக்கார். உலக சாதனைக்காக அவரை நாங்க கஷ்டப்படுத்தலை. அவருக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்திருக்கோம் அவ்வளவுதான். இப்போ அடுத்தபடியாக `ஆன்லைன் புக் அஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனைக்கு தயாராகிட்டு இருக்கார் ப்ரணவ்" என புன்னகைக்கிறார்.