Chennai: சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர்ப் பற்றாக்குறையா?- என்ன சொல்கிறார் அதிகாரி #WhereisMyWater | water scarcity in Chennai multi specialty hospital

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:00 (03/06/2019)

சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர்ப் பற்றாக்குறையா?- என்ன சொல்கிறார் அதிகாரி #WhereisMyWater

இயற்கையின் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கான எல்லாவித சமிக்ஞைகளும் நம் கண்முன்னே தெரிகின்றன. அதிலொரு பகுதியாகத் தண்ணீர்த் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தைத் தலைதிருப்பக் காத்திருக்கிறது. குடியிருப்புகளில் தண்ணீர் இல்லை என்பத்தைத்தாண்டி மருத்துவமனை வரை அவை எதிரொலிக்க ஆரம்பித்து விட்டதாக ஒரு செய்தி கிடைத்தது. அதாவது, சென்னை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் வசதிகள் குறைவாக இருக்கிறதென்றும், மாலை நேரங்களில் சுத்தமாகத் தண்ணீரின்றி நோயாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என நமக்குத் தெரியவந்தது. ஆகவே, நேரடியாக அங்கு சென்று பணியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள் அதையே கூறினார்கள். காரணம் அறிய மருத்துவமனை தொடர்பு அலுவலர் மருத்துவர் ஆனந்தகுமாரிடம் பேசினேன்.

சென்னை பல்நோக்கு மருத்துவமனை

``மெட்ரோ வாட்டர்க்கும் எங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் இருப்பதாலும் இது மருத்துவமனை என்பதாலும் எங்களுக்கு எப்போதும் தண்ணீர் வசதி இருக்கும். ஆகவே, தண்ணீர்ப் பற்றாக்குறை என்பதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், மாலை நேரங்களில் குழாய்களிலும், கழிவறைகளிலும் தண்ணீர் தொடர்ந்து வருவதில்லை எனச் சொல்வது உண்மைதான். அதை நாங்கள்தான் நிறுத்தி வைத்திருக்கிறோம். இது சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை என்பதால் காலை 9 மணியிலிருந்து 3 மணிவரை 90% சதவிகித மருத்துவமனை இயங்கும். அதற்குப் பிறகு எமர்ஜென்ஸி வார்டுகள் மட்டும்தான் இயங்கும். அந்தச் சமயங்களில் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் நிறைய இடங்களில் தண்ணீர் குழாய்கள் திறந்துவிடப்பட்டு வீணாவது எங்கள் கவனத்திற்கு வந்தது. ஆகவே, எங்கள் ஊழியரை வைத்து எல்லாக் குழாய்களையும் மூடி விடுகிறோம். நோயாளிகளுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லாத மாதிரி அவர்கள் இல்லாத இடங்களில்தான் தண்ணீரை நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர மற்ற இடங்களில் இல்லை. தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர வேறெதுவும் இல்லை" என்றார்.