“கருணாநிதி இருந்தாலும் இறந்தாலும் அவர்தான் முதலிடம்!" - இன்டர்நெட் இளைஞர்கள் | The internet generation remembers Karunanidhi on his birthday

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (03/06/2019)

கடைசி தொடர்பு:19:36 (03/06/2019)

“கருணாநிதி இருந்தாலும் இறந்தாலும் அவர்தான் முதலிடம்!" - இன்டர்நெட் இளைஞர்கள்

கருணாநிதி இன்றைய இன்டர்நெட் இளைஞர்களிடம் வந்து சேர்ந்தது எப்படி எனச் சொல்கிறார்கள், சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இளைஞர்கள்.

“கருணாநிதி இருந்தாலும் இறந்தாலும் அவர்தான் முதலிடம்!

மு.கருணாநிதி… கடந்த 50 ஆண்டுக்கால தமிழக செய்தித்தாள்கள் இந்தப் பெயர் இடம் பெறாமல் வெளியானதில்லை. ஆனால், அந்தப் பெயர் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்ற ஊடகங்களின் வாயிலாகப் பயணித்து, இன்றைய சமூக வலைதளங்களிலும் வைரல் ஆவதுதான் வியப்புக்குரிய செயலாகும். இன்றைய பரபரப்பான சூழலுக்கிடையே ‘வைரல்’களின் வாழ்நாள் என்னவோ ஓரிரு நாள்கள்தான். ஆனால், தமிழகத்தின் கடந்த 96 ஆண்டுக்கால அழியா ‘வைரல் யுக நாயகன்’ கருணாநிதி. அது கல்லக்குடியாக இருந்தாலும் சரி, மெரினாவில் இடம்வேண்டி நடத்தப்பட்ட போராட்டமானாலும் சரி, அவரின் அழைப்புச் செய்திக்கு எப்போதும் அலைகடலெனத் திரண்டுதான் இருந்திருக்கிறார்கள் அவரின் உடன்பிறப்புகள்.

கலைஞர் கருணாநிதி

'கருணாநிதியின் உடல்நிலை மோசமாக உள்ளது' என செய்திகள் வெளியானபோது, அதையொட்டி அரங்கேறிய விஷயங்களில் ஒன்று #karunanidhi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. கருணாநிதி இல்லாத அவரின் முதல் பிறந்த நாள் இந்த ஆண்டு. ஆனால், இன்றும் அவர்தான் (#HBDKalaignar96) இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம். இவை உணர்த்துவது இன்றைய இன்டர்நெட் இளைஞர்களிடமும் அவர் வந்து சேர்ந்துள்ளார் என்பதைத்தான். பொதுவெளியில் வேண்டுமானால் அவரின் 'கலைஞர்' என்ற புனைபெயர் பிரபலமாக இருக்கலாம். ஆனால், சமூக வலைதளவாசிகள் அவரைப் பேரன்பு கொண்டு அழைப்பது ‘அசுர குலத் தலைவன்’ என்றுதான். இந்நிலையில் கருணாநிதி இன்றைய இன்டர்நெட் இளைஞர்களிடம் வந்து சேர்ந்தது எப்படி எனச் சொல்கிறார்கள், சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இளைஞர்கள்.
கா.தீனதயாளன்

திராவிடம் ‘2.0’ ஒருங்கிணைப்பாளர் கா.தீனதயாளன், “பொதுவாக மனிதர்கள் பேசும்போது ‘எங்க காலத்தில் எல்லாம்’, ‘நாங்க காலேஜ்ல படிக்கும்போதெல்லாம்’ என்று அவர்கள் காலத்தில் வாழ்ந்த நடிகரையோ, நடிகையையோ சிறந்தவர் என்றும், ஏதோ அந்தக் காலகட்டத்தில் இருந்த கட்டமைப்புகளும் திட்டங்களும் வசதிகளும் சிறந்ததென்றும் பேசுவார்கள். ஆனால், கலைஞர் அதுபோன்று கிடையாது. அவர் எந்தக் காலகட்டத்துக்கும் தன்னைச் சுருக்கிக்கொண்டதில்லை. 'Adapting a new technology' என்பது சாதாரணமானதல்ல. ஆனால், கலைஞர் கைப்பிரதியில் ஆரம்பித்து தட்டச்சு, பத்திரிகை, கணினி, தொடுதிரை, சமூக வலைதளங்கள் என்று அனைத்து அறிவியல் வளர்ச்சி சார்ந்த சாதனங்களின் மூலம் கடந்த மூன்று தலைமுறையுடனும் சென்றடைந்தவர்.

'அவர் நம் காலகட்டத்தைச் சார்ந்தவர்தான்' என்ற உணர்வை எல்லா காலகட்ட மக்களின் மனங்களிலும் விதைத்தார். அதனால்தான் 2000-த்தில் பிறந்தவர்களும் அவரைக் 'கட்டுமரம்' என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். இன்று அவர் இல்லை. ஆனால், அடுத்து வரும் தலைமுறைகள் இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தது யார், இந்தக் கட்டமைப்புகளை உருவாக்கியது யார், இந்தக் கல்வி நிலையங்களைத் தொடங்கியது யார், ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை உருவாக்கியது யார், வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்தவர் யார், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தவர் யார், இந்த டைடல் பார்க்கை உருவாக்கியவர் யார் போன்ற கேள்விகளை எழுப்பும்போது அவர்களுக்கான விடையாகக் கலைஞர் இருப்பார். அப்போது அவர்களின் மனங்களையும் சென்றடைவார். நவீனத் தமிழ் சமூகத்தின் ‘ஆற்றல் அழிவின்மை விதி’ கலைஞர். அவரை அழிக்க முடியாது” என்றார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிவரும் ஜெயன் நாதன் கருணாநிதி, “கலைஞர், தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும், சென்னையில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் லட்சோபலட்சம் வகையில் சொல்லப்பட்ட ஒரு பெரும் காவியம். சென்னையின் திருவொற்றியூரில் இருந்து திருப்போரூர் வரை மின்னலாய் சென்றாலும், தக்கோலத்தில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நிமிர்ந்திருக்கும் கொடிக்கம்பம்வரை நடைப்பயணம் சென்றாலும், கலைஞர் ஆட்சியின்போது உருவாக்கிய நவீனக் கட்டுமானத்தைப் பார்க்காமல் யாரும் தவிர்த்துவிட முடியாது.

ஜெயன் நாதன் கருணாநிதி1990-களுக்குப் பின் இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் தலைகீழாக மாறியபோதும், அந்த மாற்றம் இந்த நிலத்தின் கிளைகளை அசைத்துப் பார்த்தாலும் வேரினை அசைத்துப்பார்க்காமல் இருந்ததென்றால், இப்போதும் இருக்கிறதென்றால் அதற்கான வியூகத்தை அமைத்தவர் கலைஞர்தான். மூன்று தலைமுறைக்குள்ளாகத் தமிழ்ச் சமூகம் நிமிர்ந்து நிற்பதற்கான கால்கோள் இடப்பட்டது என்று சொன்னால், அப்படிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் கலைஞர், இம்மண்ணின் வரலாறு தெரிந்த ஒவ்வொருவரின் கண்முன்னும் வந்து செல்வார். அப்படியான தீர்க்கமான எண்ணம்தான், பல இளைஞர்களைச் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றித் தொடர்ந்து பேசவைக்கிறது.

இந்திய ஒன்றியத்தின் உருவாக்கத்துக்குப் பிறகு, நிகழ்ந்துவரும் பெரும் மாற்றங்களில் முதன்மையான மாற்றம், அதிகாரங்கள் மாநிலங்களில் இருந்து நடுவண் அரசு நோக்கிச்சென்று கொண்டிருப்பதுதான். அதனினும் பெரும் மாற்றம் இந்திய ஒன்றியத்தின் பல மொழி - பல இன - பல கலாசாரம் என்ற பன்முகத்துவம் இந்தி - இந்து - இந்துத்துவ தேசியத்தின் பிடியில் தற்போது சிக்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழினத்துக்குத் தன் தனித்தன்மையை நிலைநாட்ட, பெரும் ஆற்றல் கொண்டுவரும் சித்தாந்த அலையை வட வேங்கடத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஒரு சிந்தனை கட்டுமானம் தேவைப்படுகிறது.

இன்றைய திராவிட சித்தாந்த கட்டுமானத்தை இந்த மண்ணில் 50 ஆண்டுக் காலமாக நிலைகொள்ள வைத்த பெரும் மாயன் கலைஞர் கருணாநிதி. வருங்காலத்தில் இந்துத்துவ இந்தியாவை நேர்நின்று எதிர்கொள்ள, இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் விடுதலையைப் பிரதிபலித்து, திராவிட இந்தியா என்று பேசும் ஒரு நிலை வரும்போது, அன்று கலைஞரின் வியூகங்களையும் அவர் சட்டத்தாலும் திட்டங்களாலும் உருவாக்கிய சாத்தியங்களையும் மறுஆய்வு செய்து, அதன் வாயிலாகப் படிப்பினைகளைத் தேடும் நாள் வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை” என்றார்.

கலைஞர் கருணாநிதி

ஆராய்ச்சி மாணவர் விக்னேஷ் ஆனந்த், “கலைஞரின் அவமானத்தில் மூன்று சதவிகிதம் அளவுக்கு நாம் அடைந்திருந்தாலே அவரை நாம் கண்டுணர்ந்துவிட முடியும். கலைஞரின் வெற்றியை விமர்சிப்பவர்களில் பலருக்கும், அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து முதல்வராகிவிட்டாரே என்ற காழ்ப்புணர்ச்சி உண்டு. ஆனால், இதே காரணங்கள்தான் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு அவரைக் கதாநாயகனாக்கியது. அவரின் திட்டங்கள் எப்போதும் எதிர்காலத்தை நோக்கியது. அவர் மாநில சுயாட்சி பற்றிப் பேசியபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எல்லாக் கட்சிகளும் எதிர்த்தார்கள். ஹண்டே போன்ற தலைவர்கள் வேறு எந்த முதல்வரையும் பார்த்து விமர்சிக்க முடியாத அளவுக்குக் கலைஞரை அவமானப்படுத்தினார். ஆனால், அவை அனைத்தையும் கடந்து தன்னுடைய திட்டங்களின் வாயிலாகச் சமூக நீதியை நிலைநிறுத்தியவர் கலைஞர். அதனால் சமூகநீதி பாதிப்புகளுக்கு உள்ளாகும்போதெல்லாம் கலைஞர் விவாதப் பொருளாகிறார், பேசப்படுகிறார்” என்றார்.

கலைஞர் கருணாநிதி

ஆராய்ச்சி மாணவர் சூரியமூர்த்தி, “கலைஞர் பேசப்பட்டுக்கொண்டே இருப்பதற்கு முதலில் அவரைப் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், மொழிப்போர் தொடங்கி இன்றைய ஐ,டி இளைஞர்கள்வரை வெவ்வேறு காலகட்டங்களைக் கடந்து வந்தவர். அந்தக் காலகட்டத்தைப் பாதித்த மனிதராகவும் இருக்கிறார். அவரின் சமூக நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் பலர் மென்பொறியாளர்களாக, மருத்துவர்களாக, அரசு ஊழியர்களாக உலகெங்கிலும் தற்போது பரவியிருக்கிறார்கள். கலைஞரைப் பற்றி அத்தகையோர் தொடர் உரையாடலை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்தின் இறுதிக்கட்டத்தில் பிறந்தவர் கலைஞர். ஆனால், இன்றைய பின் நவீனத்துவ காலகட்டத்திலும் அரசியலை தன்னைச் சுற்றிச் சுழலவைத்ததுதான் அவரின் வெற்றி. காலம் முழுக்க கலைஞர்தான், தமிழக அரசியலின் மையம். எந்த ஒன்றை அவர் ஆதரிக்கிறார், எதிர்க்கிறார் என்பதை வைத்தே மற்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் இருந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது காலம் முழுக்க கலைஞர் பேசப்பட்டுத்தான் வந்திருக்கிறார். அதன் தொடர்ச்சிதான் இன்றைய இணையதளங்களிலும் எதிரொலிக்கின்றன” என்றார்.

ஆம், தமிழ், சமூக நீதி, நவீன தமிழகம் போன்ற வார்த்தைகள் விவாதிக்கப்படும் எல்லா காலங்களிலும் கருணாநிதி என்ற பெயரும் விமர்சனமாகவோ, ஆதரவாகவோ உச்சரிக்கப்படும். ஆனால் ஒருபோதும் அவரைப் புறக்கணிக்க முடியாது.


டிரெண்டிங் @ விகடன்