``மின் அட்டையில் மதப் பிரசாரம்!” - வேலூரில் சர்ச்சை | Religious ad in TNEB card - protest

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (03/06/2019)

கடைசி தொடர்பு:19:05 (03/06/2019)

``மின் அட்டையில் மதப் பிரசாரம்!” - வேலூரில் சர்ச்சை

வேலூர் அருகே மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்ட மின் பயனீட்டுக் கட்டண அட்டையில் கிறிஸ்துவ மதப் பிரசார வாசகம் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மின் பயனீட்டு கட்டணக் அட்டையில்  இடம்பெற்றிருந்த கிறித்துவ மதப் பிரசார வாசகம்.

வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் இயங்கிவரும் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில், நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்ட மின் பயனீட்டுக் கட்டண அட்டையில் `கிறிஸ்துவ மதப் பிரசார விளம்பரம்’ இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த நுகர்வோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசுத்துறையின் கீழ் இயங்கிவரும் மின்வாரியத்தில் மதப் பிரசாரத்தை ஊக்குவிப்பதா என்று இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.

சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அந்த மின் அளவீட்டு அட்டைகளைக் கிறிஸ்துவ அமைப்பிடமிருந்து இலவசமாக வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக உயரதிகாரி ஒருவர் உறுதியளித்தார். இதையடுத்து, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.

இதுபற்றி, இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கூறுகையில், ``மின்வாரிய அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பினர் திட்டமிட்டு மதப் பிரசாரம் அடங்கிய அட்டையை வழங்கியிருக்கிறார்கள். மின் பயனீட்டுக் கட்டண அட்டையை 5 ரூபாய் கொடுத்துதான் நுகர்வோர்கள் வாங்குகிறார்கள். மின்வாரியம் கடனில் இயங்கவில்லை. அப்படியிருக்க எதற்காக, ‘ஸ்பான்சர்’ பெயரில் இதுபோன்ற மதப் பிரசாரத்துக்கு துணை போகிறார்கள். கணக்கீட்டாளர் ஒருவர் மூலம்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார்.

ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாலோம் ரிவைவல் பிரேயர் மினிஸ்ட்ரிஸ் தேவாலயத்தின் பாதிரியார் சாத்ராஜ் சரவணனிடம் கேட்டதற்கு, ``நான் மின்கட்டணம் செலுத்துவதற்காக அந்த மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது, புதிய மின் பயனீட்டு அட்டையைக் கேட்டு நுகர்வோர்கள் இரண்டுபேர் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டிருந்தனர். மின் பயனீட்டு அட்டை இல்லை என்று ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதனால், ஸ்பான்சர் பெயரில் மின் பயனீட்டு அட்டைகளை வழங்கினேன்.

நான் மதப் பிரசாரம் செய்யும் நோக்கில் அந்த அட்டைகளை வழங்கவில்லை. இந்து முன்னணியினர் விவகாரத்தைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களின் நலனுக்காகதான் கொடுத்தேன். இதில், உள்நோக்கம் ஏதுமில்லை. இந்து மதத்தை யாராலும் அழிக்கமுடியாது. கிறிஸ்துவம் என்னுடைய நம்பிக்கை. அதற்காக, மற்ற மதங்களை நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நான், பா.ஜ.க-வில் வேலூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவில் இருக்கிறேன். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.