``எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் உழவர்களின் கவசம் பா.ம.க !" - மருத்துவர் ராமதாஸ் | "The armor of the farmers in the eight-way road is the PMK!" - Doctor Ramadas

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (03/06/2019)

கடைசி தொடர்பு:19:20 (03/06/2019)

``எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் உழவர்களின் கவசம் பா.ம.க !" - மருத்துவர் ராமதாஸ்

``எட்டுவழிச் சாலைத் திட்டத்தால், உழவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசம் பா.ம.க-தான்" என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். 

ராமதாஸ்

மத்திய அரசின் பாரத்மால பரியோஜனா என்னும் திட்டத்தின்கீழ் சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக 276 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாப்பணை வெளியிட்டது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு நிலமும் கையகப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 

இதையடுத்து, எட்டுவழிச் சாலைத்திட்டத்துக்கான தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன்கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது, சென்னை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை வரவேற்ற தமிழக விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். அதேநேரத்தில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ``எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்திருப்பது பின்னடைவு கிடையாது. அரசு மேல்முறையீடு செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்குச் சாலை வசதி மிகவும் அவசியம்" என்றார். அதேபோல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நீதிமன்றம் தடை விதித்தாலும், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும்" என்றார். 

அப்போது தேர்தல் நேரம் என்பதால், நிதின் கட்கரியின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனால், ``உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது" என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. தேர்தல் நேரம் என்பதால், அமைதிகாத்த எடப்பாடி பழனிசாமி, அதற்குப் பிறகு, ``எட்டுவழிச் சாலை அவசியம் தேவை" என்றார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், எட்டுவழிச் சாலைக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மே 31-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று அந்த மனுவை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், ``சென்னை- சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இந்தத் திட்டத்தால் உழவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பா.ம.க-தான் என்பதை மக்கள் உணர்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க