`போன வருஷம் மாடி வீடு; இப்போ ரேஷன் கடை - ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியின் அவல நிலை! | government school building in damage with school students

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (03/06/2019)

கடைசி தொடர்பு:20:45 (03/06/2019)

`போன வருஷம் மாடி வீடு; இப்போ ரேஷன் கடை - ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியின் அவல நிலை!

ஒரத்தநாடு அருகே ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்து பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதால் பள்ளிக்கு வந்த மாணவர்களை ரேஷன் கடையில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தனியார் வீடு ஒன்றில் செயல்பட்ட இந்தப் பள்ளி தற்போது ரேஷன் கடையில் செயல்படுகிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையோடு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியைச் சேர்ந்தது கருவிழிக்காடு என்ற கிராமம். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அனைவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள். இந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து வழக்கம்போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். ஆனால், பள்ளிக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்து சுவரில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. சுத்தமாக அந்தக் கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. உடனே ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டடமான ரேஷன் கடைக்கு அழைத்துச் சென்று அங்கு உட்கார வைத்து பாடம் நடத்தத் தொடங்கினர். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு முன் திரண்டதோடு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை

இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரிடம் பேசினோம்,``1967-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தப் பள்ளி திறக்கப்பட்டது. முதலில் ஆறு மாணவர்கள் மட்டுமே படித்தனர். பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்ததால் அடிப்படைக் கல்வி மாணவர்களுக்கு தரமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் எங்க ஊர் பள்ளியில்தான் தொடக்க கல்வியைக் கற்பதற்கு பெற்றோர்கள் சேர்த்துவிடுவார்கள். இங்கு படித்த பலர் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். மேலும், இந்தப் பள்ளியில் படித்துவிட்டு உயர் நிலை கல்வியைக் கற்க வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து முன்னிலையில் திகழ்வார்கள். இதற்கு காரணம் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடம் தான் காரணம்.


கட்டடம்

பாரம்பர்யமிக்க இந்தப் பள்ளியின் கட்டடம் சில ஆண்டுகளாகவே சேதமடைந்து காணப்படுகிறது. இதை நாங்கள் கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறி மனுக்கள் கொடுத்தோம். கட்டடம் இடியும் தறுவாயில் உள்ளதால், கடந்த கல்வி ஆண்டில்கூட பள்ளிக் கட்டடத்தில் பள்ளி நடைபெறவில்லை. அருகில் உள்ள மாடி வீடு ஒன்றில் பள்ளியை நடத்தினர். இது அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். வகுப்பு நடத்துவதற்கு ஏற்ற கட்டடம் இது இல்லை. எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்துவிடும் என அதிகாரிகள்கூட ஏற்கெனவே கூறியிருக்கின்றனர். திட்டமிட்டபடி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால், கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு ரேஷன் கடையில் வைத்து பாடம் நடத்தப்பட்டது. அரசின் அலட்சியமும் மெத்தனமுமே  இதற்கு காரணம்.

பள்ளி திறப்பதை அறிவித்த அரசுப் பள்ளிக் கட்டடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்திருக்க வேண்டாமா. தனியார் வீட்டிலும், ரேஷன் கடையில் வகுப்புகளை நடத்துவது என்பது பெரும் வெட்கக்கேடு. கடந்த ஆண்டு வீடு, இப்போது ரேஷன் கடை என்ன ஓர் அவல நிலை. இதுதான் அரசினுடைய முன்னேற்றமா எங்க பிள்ளைகள் மாற்றுப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 3 கிலோ மீட்டர் தூரம்  சென்றுதான் படிக்க வேண்டும். சின்னப் பிள்ளைகள் எப்படி செல்வார்கள். இதையெல்லாம் உணர்ந்தே நாங்கள் புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், அரசு காட்டிய அலட்சியத்தால்தான்  இன்று ரேஷன் கடையில் வகுப்புகள் நடைபெற்றது. உடனே இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்து புதிய கட்டடம் கட்டிக் கொடுத்து பள்ளியை நடத்த உத்தரவிடுவதோடு ஏழை மாணவர்களைக் காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க