அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் வழக்கு - தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்! | HC decides against minister velumani's petition

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (03/06/2019)

கடைசி தொடர்பு:21:17 (03/06/2019)

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் வழக்கு - தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கான்ட்ராக்ட்டுகள் வழங்குவதில் பல்வேறு ஊழல்கள் செய்ததாக பல்வேறு ஊழல் புகார்களை, ஆதாரங்களுடன் வரிசையாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது அறப்போர் இயக்கம். லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இந்தப் புகார்களைக் கொடுத்த அதே சமயம், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல வழக்குகளைத் தொடர்ந்தது.

அமைச்சர் வேலுமணி

இந்த நிலையில், அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாகக் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறப்போர் இயக்கம் மீது உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்கு ரூபாய் ஒரு கோடி கேட்டு அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால், தன்னைப் பற்றி மீடியாவிடம் பேசுவது, செய்தி வெளியிடுவது ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி, உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
 
இடைக்காலத் தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், அமைச்சர் வேலுமணி தொடர்ந்த பத்து வழக்குகளையும் தடை செய்து உத்தரவிட்டார். இதோடு ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக அமைச்சர் வேலுமணி  தொடர்ந்திருந்த இடைக்கால தடை வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

அமைச்சர் வேலுமணி

பிரதான வழக்கான அவதூறு வழக்கு விசாரணை தடையின்றி நடைபெறும் எனவும், இந்தத் தீர்ப்பு அவ்வழக்கு விசாரணைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவரது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

சட்ட ரீதியாக,  அவதூறு வழக்கு என்பது, தன் மீது ஏற்பட்ட களங்கத்துக்காக நஷ்டஈடு கோரி தொடரப்படுவது. இதில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தொடர்ந்து தன் பெயருக்குக் குந்தகம் வரக் கூடாது என்பதற்காக, இந்த அவதூறு வழக்கின் இடைக்கால உத்தரவு (Interim Order) கோரி வழக்கு தொடரப்படும். இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட நபர், வழக்கு தொடர்ந்தவர் பற்றி எந்தவிதமான கருத்தும் கூறுவதற்குத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் வேலுமணி

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ``ஆதாரங்களோடு நாங்கள் பேசுகிறோம் என்பதையே எங்கள் தரப்பு வாதமாக நாங்கள் முன் வைத்தோம். நீதிமன்றம் அதற்கு செவி மடுத்திருக்கிறது. தற்போது அவர் மீது நாங்கள் தொடர்ந்த லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில், குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை இது குறித்த பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. 

அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சியில், நடைபெறும் பிற  ஊழல்கள் குறித்த புகார்  அளித்திருக்கிறோம். அது தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறேன், வெளிப்படையான டெண்டர் முறையைச் சென்னை மாநகராட்சி கடைப்பிடிக்க தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் " என்றார். 

மலிந்து வரும் ஊழல் புகார்கள், இந்தியாவின் தீராத நோயாகிப் போன நிலையில், இத்தகைய சில தீர்ப்புகள் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது சற்று நம்பிக்கை கொண்டு, நாம் சற்று இளைப்பாற வழி வகுக்கிறது என்பதே நிஜம்.