குளுகுளு வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் - பெற்றோரால் வளர்ந்த அரசுப்பள்ளி! | Parents Provides A/C to Nagercoil Government school

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (03/06/2019)

கடைசி தொடர்பு:21:45 (03/06/2019)

குளுகுளு வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் - பெற்றோரால் வளர்ந்த அரசுப்பள்ளி!

நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியை முன்னேற்றுவதில் பெற்றோர் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசுப்பள்ளி வகுப்பறையில் குளு குளு ஏ.சி வசதி அமைத்துக் கொடுத்து அசத்தியுள்ளனர்.

அரசுப்பள்ளி

நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியில் அமைந்துள்ளது சதவதானி செய்குதம்பி பாவலர் அரசு தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளைப் போன்று பிரகாசமாகக் காட்சியளிக்கும் இந்தப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளில் குளுகுளு வசதி ஏற்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் பெற்றோர்கள். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அருள் கில்பர்ட் கூறுகையில், "இந்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். நான் வரும்போது 60 மாணவர்கள்தாம் படித்துக்கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு 100 மாணவர்கள் படித்தார்கள். இந்த ஆண்டு 125 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வியும் இருப்பதால் மாணவர்கள் அதிகமாக வருகிறார்கள்.

அருள் கில்பர்ட்

இந்தப் பகுதி மக்களும் பெற்றோரும் உதவி செய்வதால் பள்ளி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. கனடாவில் பணியில் இருக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் வானியல் தொலை நோக்கி வாங்கித் தந்தார். டைல்ஸ் போட்ட கழிப்பறை, வண்ணமயமான காம்பவுண்ட் சுவர், வகுப்பறைகளுக்கு வண்ணம் பூசுதல் எனப் பெற்றோரின் பங்களிப்பு அதிகமாகவே கிடைக்கிறது. இரண்டு வகுப்பறைகள் மழையில் ஒழுகிக்கொண்டிருந்தன. கூரையில் டைல்ஸ் அமைத்து ஒழுகுவதை நிறுத்தினார்கள். பெஞ்ச், டெஸ்க்குகள் வாங்கித் தந்ததுடன் அவ்வப்போது பெயின்ட் அடித்து நல்லமுறையில் பராமரிக்கிறார்கள்.

வகுப்பறையில் ஏ.சி.

இந்தப் பள்ளியில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் பெற்றோரால் உருவானதுதான். கலர் பிரின்டர், லேப்டாப் ஆகியவை வாங்கித் தந்துள்ளனர். முதல் வகுப்பு மாணவர்கள் அமருவதற்காகப் பேபி செயர்ஸ் வாங்கித்தந்தனர். இப்போது ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் 5-ம் வகுப்பு ரூம்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாலிக் அகமது ஏ.சி அமைத்துள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைத்துள்ளனர். இனி அனைத்து வகுப்பறைகளுக்கும் ஏ.சி அமைப்பதற்காக அடுத்தகட்ட முயற்சி எடுத்து வருகின்றனர். அரசுப் பள்ளிக்குச் செய்யும் உதவியால் மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளைப் போன்ற வசதிகளும் கல்வியும் கிடைக்கிறது" என்றார்.

மாலிக் அகமது

 

கேட்டரிங் தொழில் செய்துவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாலிக் அகமது கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளி சிதிலம் அடைந்த நிலையில் காணப்பட்டத்து. பள்ளியை முன்னேற்றுவதற்காகப் பல்வேறு வசதிகள் செய்துள்ளோம். வீட்டில் மின்விசிறிகூட இல்லாத நிலையில் உள்ள ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. அவர்கள் கோடை வெப்பத்தில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏ.சி அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற எனது நீண்டகால ஆசை இன்று நிறைவேறியிருக்கிறது. பெற்றோர்கள் முயற்சி செய்தால்தான் இனி அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும். தனியார் பள்ளிகளுக்காக செலவு செய்வதில் பத்தில் ஒரு பங்கை பெற்றோர் செலவு செய்தாலே அரசுப் பள்ளிகளும் மாணவர்களும் முன்னேற்றம் காண்பார்கள்" என்றார்.