`சொந்த வீட்டால நிம்மதி போச்சு; புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்ல’- குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் | virudhunagar man suicide attempt with his family

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (03/06/2019)

கடைசி தொடர்பு:22:40 (03/06/2019)

`சொந்த வீட்டால நிம்மதி போச்சு; புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்ல’- குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்

கொத்தனார்

மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தன் குடும்பத்தினருடன் கொத்தனார் தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்

விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. கொத்தனாராக வேலை செய்து வருகிறார். ஆனால், சொந்தமாக வீடு வாங்கியதால் கிராம மக்கள் தங்களைப் புறக்கணிப்பதாகவும், தங்களை ஊரை விட்டு விரட்டுவதற்காக தங்களுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், தங்கப்பாண்டி தன் தாய், மனைவி, குழந்தைகளுடன் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது சூலக்கரை காவல்துறையினர் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் இருந்து சந்திரகிரிபுரம் கிராமத்தில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே அம்மா, மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். ஆனால், வெளியூரிலிருந்து வந்து வீடு வாங்கிய ஒரே காரணத்தால் கிராம மக்கள் சிலர் எங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர். குழந்தைகளால்கூட தெருவில் எங்கும் விளையாட முடியவில்லை. குழந்தைகளோடு யாரையும் விளையாட அனுமதிப்பதில்லை. இதனால் வாழ்க்கையில் நிம்மதியே போச்சு.

கொத்தனார்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் 4 முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தோம். வேலைக்குக்கூட செல்ல முடியாமல் இருக்கிறோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்வதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.