தேனியில் கடமைக்கு நடத்தப்படும் ஜமாபந்தி! – கொதிப்பில் சமூக ஆர்வலர்கள் | Social Activists where upset on jamabandi

வெளியிடப்பட்ட நேரம்: 07:24 (04/06/2019)

கடைசி தொடர்பு:07:35 (04/06/2019)

தேனியில் கடமைக்கு நடத்தப்படும் ஜமாபந்தி! – கொதிப்பில் சமூக ஆர்வலர்கள்

தேனி மாவட்டத்தில், இன்று (04/06/2019) முதல் வரும் 13/06/2019 வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களின் வருவாய் தீர்வாயம்தான் இந்த ஜமாபந்தி. வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். அப்போது, மக்கள் தங்களின் குறைகளை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஜமாபந்தியில் மனு அளிக்கலாம். அந்த மனு, உடனே விசாரிக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தியானது, பெயருக்கு நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரான போடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், “மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜமாபந்தி. ஆனால், தேனி மாவட்டத்தில் ஏதோ கடமைக்கு என ஜமாபந்தி நடத்தப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜமாபந்தியில், போடி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன, அதனைச் சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் வறட்சியைச் சந்திக்க நேரிடும். எனவே, நீ நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தேன்.

ஜமாபந்தி குறித்து ராமகிருஷ்ணன்

கொடுத்த மனு எங்கே எனத் தெரியவில்லை. இதுவரை அதற்கான பதில் இல்லை. இதனைச் சுட்டிக்காட்டி 2018-ம் ஆண்டு நடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்தேன். அதற்கும் பதில் இல்லை. சரி, பொதுவான பொதுநல நோக்கோடு புகார் மனு கொடுத்ததால்தான் பதில் இல்லை என நினைத்தேன். ஆனால், தங்களுடைய சொந்தப் பிரச்னை தொடர்பாக, நிலப்பிரச்சனை, உதவித்தொகை பிரச்னை என பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் பல தீர்வு காணாமல் உள்ளன. அதிகாரிகள், கொடுக்கும் மனுக்களுக்குப் பதில் கொடுக்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால்தான் இங்கு புகார் மனுக்களைக் கொடுக்கிறார்கள். அதனை மாவட்ட நிர்வாகம் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்” என்றார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியபோது, “ஜமாபந்தியில் புகார் மனு கொடுத்தால் நிச்சயம் பதில் கொடுப்போம்” என்றார். வெறும் பதில் மட்டும் போதாது. தீர்வு வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.