அடிபட்ட விலங்குகளைப் பாதுகாக்கும் ராஜபாளையம் விலங்குகள் நல மையம்... 5 ஆண்டுகளில் 470 உயிரினங்கள் மீட்பு! | NGO for wild animals: 470 animals rescue and treatment

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:35 (10/06/2019)

அடிபட்ட விலங்குகளைப் பாதுகாக்கும் ராஜபாளையம் விலங்குகள் நல மையம்... 5 ஆண்டுகளில் 470 உயிரினங்கள் மீட்பு!

எங்காவது ஓர் உயிரினம் அடிபட்டுக் கிடந்தால் வனத்துறையினரோ அல்லது பொதுமக்களோ எங்களுக்குத் தகவல் தெரிவிப்பர். 24 மணி நேரமும் எங்கள் குழுவினர் தயார் நிலையில் இருப்பதால், தகவல் கிடைத்த உடனே தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு வாகனங்களில் சென்றுவிடுவோம்.

அடிபட்ட விலங்குகளைப் பாதுகாக்கும் ராஜபாளையம் விலங்குகள் நல மையம்... 5 ஆண்டுகளில் 470 உயிரினங்கள் மீட்பு!

சாலையோரங்களில் அடிபட்டுக் கிடக்கும் வன உயிரினங்கள் மீட்கப்பட்டு, பராமரிப்பதற்கென்றே விலங்குகள் நல மையம் என்ற பெயரில் ராஜபாளையத்தில் ஓர் அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை 470 உயிரினங்களை மீட்டு சிகிச்சையளித்துள்ளனர்.

விலங்குகள் நல மையம்

இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல.... விலங்குகள், பறவைகள், ஊர்வன என எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுதான். ஆனால் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மான், குரங்கு, யானை போன்ற வனஉயிரினங்கள் உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகின்றன. அவை, சாலைகளைக் கடக்கும்போது அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் அடிபடும் சம்பவங்களையும், ஊருக்குள் திரியும் நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்களையும் தினந்தோறும் நாம் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நம் கண்முன்னே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வனவிலங்குகளை நாம் பார்த்தும் பார்க்காமலும்தான் செல்கிறோம். ஓர் உயிராகக்கூட நம்மால் அவற்றை நினைக்க முடியவில்லை.

சில நேரங்களில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் உயிரினங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நம் மனதுக்குள் தோன்றினாலும்கூட எப்படிக் காப்பாற்றுவது என்பது தெரியாமல் தவிக்கிறோம். இதனால் நாளுக்கு நாள் வன உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து, அவை அழிவை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றன.

ஷ்யாம்ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக வன உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது ராஜபாளையத்தில் உள்ள விலங்குகள் நல மையம் என்ற தன்னார்வ அமைப்பு. மதுரை, விருதுநகர், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என எங்கே வன உயிரினங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாலும் தகவல் கிடைத்ததும் இந்த அமைப்பினர் உடனடியாகச்  சம்பவ இடத்திற்குச் சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஷ்யாம் கூறும்போது, ``ஆரம்பத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத்தான் நடத்திவந்தோம். அப்போது சாலையோரங்களில் அடிபட்டு ஆதரவின்றிக் கிடக்கும் வனஉயிரினங்களை மீட்டு பாதுகாக்க வேண்டும் என நினைத்து 2014-ம் ஆண்டு விலங்குகள் நல அறக்கட்டளையை உருவாக்கி இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவுசெய்தோம். வனத்துறையினரோடு இணைந்து பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற வனஉயிரினங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கால்நடை மருத்துவர் ராமச்சந்திரன், ரகு, செல்வம், பராமரிப்பாளர் யாமினி உட்பட 9 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். எங்காவது ஓர் உயிரினம் அடிபட்டுக் கிடந்தால் வனத்துறையினரோ அல்லது பொதுமக்களோ எங்களுக்குத் தகவல் தெரிவிப்பர். 24 மணி நேரமும் எங்கள் குழுவினர் தயார் நிலையில் இருப்பதால், தகவல் கிடைத்த உடனே தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு வாகனங்களில் சென்றுவிடுவோம். லேசான காயமாக இருந்தால் அங்கேயே சிகிச்சையளித்து வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவோம். பெரிய காயமாக இருந்தால் இங்கே கொண்டுவந்து சிகிச்சையளிப்போம். விலங்குகளுக்கும், நமக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதால் உயிரினங்களைக் கையால் தொடவே மாட்டோம். சரியான உபகரணங்கள் மூலம்தான் கையாளுவோம்.

மீட்பு

குட்டியாக இருந்தால் இங்கேயே வளர்த்து வேட்டையாடும் வகையில் பயிற்சியும் அளிப்போம். அதன்பின்பே வனத்துக்குள் அனுப்புவோம். பறக்க முடியாமல் கிடந்த பழந்தின்னி வௌவால் ஒன்றை மீட்டு நாமக்கல்லுக்குக் கொண்டுசென்று சிகிச்சையளித்தோம். பறக்கத் தயாரானவுடன் அவற்றைக் கொண்டுசென்று பறக்கவிட்டோம்.

உயிரினங்களை மீட்பது முதல் பராமரித்தல், வனத்துறைக்குள் மீண்டும் அனுப்பிவைத்தல் வரை ஒவ்வொரு நிகழ்வையும் வனத்துறையினருக்குத் தெரிவித்துவிடுவோம். எங்களுடைய ஒவ்வொரு பணியையும் ஆவணப்படுத்திவைத்துள்ளோம். தெருவிலிருந்து நாட்டு நாய்களை மீட்டு பராமரித்து வைத்திருப்போம். வெளிநாட்டு நாய் வளர்க்க விரும்புபவர்களிடம் நாட்டு நாய்களை வளர்க்குமாறு கூறி இந்த நாய்களையே கொடுத்தனுப்புவோம். மருத்துவமனையில் நாய், ஆடு போன்றவற்றுக்குச் சிகிச்சையளிப்பதில் கிடைக்கும் பணம் மற்றும் நண்பர்கள் அளிக்கும் உதவியுடனேயே இந்த அமைப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

மீட்பு

இதுவரை மீட்கப்பட்டவை:

2014-ல் 12, 2015-ல் 70, 2016-ல் 76, 2017-ல் 107, 2018-ல் 140, 2019-ல் 65 என 470 வன உயிரினங்களை மீட்டுள்ளோம். இதில் 71 பாலூட்டிகள், 196 ஊர்வன, 203 பறவைகள் அடங்கும். வன உயிரினங்களுக்காக ஆரம்பித்தாலும் தற்போது வளர்ப்புப் பிராணிகளும் சாலையோரங்களில் அடிபட்டுக் கேட்க நாதியின்றிக் கிடப்பதால் அவற்றையும் மீட்டு வருகிறோம். இதுவரை 4 மாடுகள், 2 குதிரைகள், 27 நாய்கள், 25 பூனைகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்