“அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை! - அசத்திய கிராம மக்கள்... நெகிழ்ந்த ஆசிரியர்கள் | Public gives many products to government school

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (04/06/2019)

கடைசி தொடர்பு:11:07 (04/06/2019)

“அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை! - அசத்திய கிராம மக்கள்... நெகிழ்ந்த ஆசிரியர்கள்

கோவையில் அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொடுத்து அசத்திய  கிராம மக்கள்

ஏதேதோ காரணங்களைச் சொல்லி அரசுப் பள்ளிகளைப் புறக்கணிக்கும் மக்கள் பெருகிவிட்ட  சூழலில், அரசுப் பள்ளிகளைக் கொண்டாடும் மக்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். அந்த வகையில், கோவையில்  கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட  ஒரு  அரசுப் பள்ளிக்கு,  ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை  சீர்வரிசையாகக்  கொடுத்து நெகிழவைத்திருக்கிறார்கள், ஒரு கிராம மக்கள். 

கோவை, எட்டிமடையை  அடுத்துள்ளது, கே.ஜி.சாவடி. அந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, அந்தக் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். டேபிள், சேர், ஃபேன்,  பீரோ, குடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான முதல்  உதவிப்பெட்டி உள்ளிட்ட 42 வகையான பொருள்களை கிராம மக்கள் வழங்க, முதல் நாளே பள்ளி திருவிழாக்கோலம் பூண்டது. 

இதுகுறித்து கே.ஜி.சாவடி மக்களிடம் பேசினோம், “நடுநிலைப்பள்ளியாக இருந்த எங்கள் பள்ளி போன வருஷம்தான் உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட முதல் வருடத்திலேயே, பத்தாம் வகுப்பில்  100 சதவிகித தேர்ச்சியைக் கொடுத்துள்ளார்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவது பெற்றோர்களின் கடமை அல்லவா...  அதனால்தான், இந்தச் சீர் வரிசை.  கிராமத்தில் உள்ள எல்லோரும் இதற்கு தங்களாலான பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களை வாங்கி, பள்ளி திறப்பதற்கு முன்பு கோயிலில் வைத்து பூஜைசெய்து, மாணவர்களை வைத்தே ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்தோம். ஆசிரியர்கள் நெகிழ்துவிட்டார்கள். இதுமட்டுமல்லாது, பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழாவையும் துவக்கிவைத்துள்ளோம்” என்கிறார்கள் பூரிப்போடு.

இதுகுறித்துப் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர்  ஜாஹிருனிஷா பேகம்,  “அரசுப் பள்ளிமீது இவ்வளவு அக்கறையோடு இருக்கும் மக்கள் வசிக்கும் ஊரில் வேலைபார்ப்பது விவரிக்கவே முடியாத சந்தோஷம். மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் இது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. பொறுப்பைக் கூட்டியுள்ளது. இங்கு படிக்கும் ஒவ்வொருவரையும்  தலைசிறந்த மாணவராக உருவாக்குவதே இந்த ஊர் மக்களின் அன்புக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக்கடன்” என்று நெக்குருகினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க