`இந்த ஆட்சி தொடர்ந்தாதான் உங்களுக்கும் நல்லது!'- எடப்பாடியின் ‘எமோஷனல்’ அஸ்திரம் | edappadi palanisamy carried out emotional attack on aiadmk mlas

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:14 (04/06/2019)

`இந்த ஆட்சி தொடர்ந்தாதான் உங்களுக்கும் நல்லது!'- எடப்பாடியின் ‘எமோஷனல்’ அஸ்திரம்

மெஜாரிட்டிக்குத் தேவையான 118 பலத்தில் இருந்து, வெறும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் கூடுதலான எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கிறது எடப்பாடியார் ஆட்சி. அதிகாரபலத்தின் வாசல் வரை வந்தும், கோட்டைக்குள் நுழைய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் தி.மு.க-வினர் கொதித்திருக்கிறார்கள். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இழுத்து, ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தி.மு.க இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் பறக்கின்றன. இந்நிலையில், இப்தார் நோன்பு நிகழ்ச்சி வாயிலாக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எமோஷனல் அஸ்திரத்தை ஏவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடியாரை சந்தித்துவிட்டு வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். “ஒவ்வொரு வருடமும் எங்கள் தொகுதியில் நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில்தான் கலந்துகொள்வோம். வழக்கத்துக்கு மாறாக, ஜூன் 4-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் புறப்படுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, முதல்வரே எங்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி அழைத்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ-க்கள் முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினோம். ‘நம்ம ஆட்சியில உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியிருக்கா? பத்திரிகைக்காரங்கதான் ஏதோ, மூணு நாலு அமைச்சர்கள் மட்டும் நல்லா சம்பாதிக்கிறதா எழுதுறாங்க. உண்மையச் சொன்னா, இந்த ஆட்சியில நீங்க எல்லாருமே பயனடைஞ்சிருக்கீங்க.

எடப்பாடி பழனிச்சாமி

மாவட்டச் செயலாளர், அமைச்சரோட என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க. நான் பேசி தீர்த்துவைக்கிறேன். நம்ம ஆளுங்க சிலர் தி.மு.க-வோட பேசிக்கிட்டு இருக்கிறதா தகவல் வருது. அவங்க யார் யார்னு எனக்குத் தெரியும். அதை வெளிப்படுத்தத் தேவையில்ல. அடுத்த ரெண்டு வருஷத்துக்கு நம்ம ஆட்சி தொடர்ந்தாதான், 2021 சட்டமன்றத் தேர்தல தெம்பா எதிர்கொள்ள முடியும்.  அதுதான் உங்களுக்கும் நல்லது. அம்மா அமைச்சுக் கொடுத்த அரசாங்கத்த தி.மு.க-வுக்கு தாரைவார்க்கக் கூடாது. தி.மு.க-வுக்கு இப்ப கிடைச்சிருக்கிற வெற்றி தற்காலிகமானதுதான். இன்னும் ரெண்டு வருஷத்துல நிலைமை எப்படி வேணாலும் மாறலாம். அதுக்கு நாம, முதல்ல ஒத்துமையா இருக்கோணும்!’ என்றார்.

அதிமுக இப்தார் நிகழ்ச்சி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த ‘எமோஷனல்’ அஸ்திரம், பல எம்.எல்.ஏ-க்களை வெகுவாகக் கரைத்துவிட்டது. ஆனாலும் ஒருசிலர், பணம் கொடுப்பார்கள் என ஏமாந்ததும் உண்மை. அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு உளவுத்துறை டீமே செயல்படுகிறது. இந்த ‘எமோஷனல் அட்டாக்’ வேலை செய்யுமா என்பது போகப் போகத்தான் தெரியும்” என்றனர்.

அதிமுக இப்தார் நிகழ்ச்சி

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க நடத்தும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் தவறாது கலந்துகொள்வார். ஆனால் இம்முறை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில்தான், இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் பெயர் இருந்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிக்கு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் இப்தார் நிகழ்ச்சியை முதல்வர் புறக்கணிப்பது இதுவே முதல்முறை. தன் கட்சி எம்.எல்.ஏ-க்களை தி.மு.க விலை பேசுவதாலும், மத்திய அரசு பழைய இணக்கத்துடன் இல்லாததாலும், முதல்வர் ‘அப்செட்’டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மோடி

மத்திய அரசின் தயவு இருந்தால்தான் ஆட்சி நீடிக்கும் என்பதில் எடப்பாடியார் கவனமாக இருக்கிறார். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம், சில்லறை வர்த்தகர்கள், கடை உரிமையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் சத்தியம் செய்துள்ளார். ஆனால், மத்திய அரசு உறுதுணையாக இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி.