தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை! - முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு | Three Mullaperiyar dam analysis

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (04/06/2019)

கடைசி தொடர்பு:13:28 (04/06/2019)

தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை! - முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. இன்னும் இரண்டு தினங்களில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில், இன்று முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு செய்தது.

முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில், தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகரன், கேரள நீர்ப்பாசனத் துறை முதன்மைச் செயலர் அசோக் மற்றும் தமிழக, கேரள அரசுகளின் பொதுப்பணித்துறை, நீர்ப் பாசனத் துறை அதிகாரிகள், முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். கடந்த 2014-ம் ஆண்டு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் பேபி அணையைப் பலப்படுத்த கேரள அரசு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. பேபி அணையின் அருகே உள்ள மரங்களை வெட்டினால் மட்டுமே அணையைப் பலப்படுத்த முடியும். மரங்களை வெட்ட கேரள வனத் துறை தொடர்ந்து அனுமதி மறுத்துவருகிறது. மேலும், அணைக்குச் செல்லும் வல்லக்கடவு பாதையை வேண்டுமென்றே கேரள அரசு சரிசெய்யாமல் காலதாமதம் செய்கிறது.

முல்லைப்பெரியாறு அணை

இதெல்லாம் ஒருபுறம் என்றால், அணையில் வேலை செய்யும் தமிழகப் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்காமல் உள்ளது கேரள அரசு. இப்படி தமிழக உரிமைகள் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையில் பறிபோய்க்கொண்டிருக்கும் சூழலில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த மூவர் குழு தீர்வு காணுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று மாலை, மூவர் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கின்றனர்.