`வைரம், தங்கத்தைத் திருடினர், பின்னர்..!'- கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்யக் கதை | Robbers who are caught after robbery

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (04/06/2019)

கடைசி தொடர்பு:13:55 (04/06/2019)

`வைரம், தங்கத்தைத் திருடினர், பின்னர்..!'- கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்யக் கதை

மாட்டிக்கொள்ளாமல் இருக்க திருடிய வீட்டில் மிளகாய்ப் பொடியைப் போடச்சொல்வார் கேங் லீடர் வடிவேலு. ஆனால், அப்ரன்டிஸான சிஷ்யர் தாடி பாலாஜி, திருடிய வீட்டிலிருந்து வடிவேலு வீடு வரைக்கும் மிளகாய்ப் பொடியைப் போட்டு, போலீஸிடம் தாங்களாகவே மாட்டிக் கொள்வார்கள். இதைபோன்ற காமெடி சமீபத்தில் மதுரையில் நடந்தது. அதுவும் திருடிய வீட்டின் உரிமையாளரிடமே திருடிய நகைகளை விற்கப்போய் வசமாகச் சிக்கியுள்ளார்கள் திருடர்கள்.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``மதுரை சொக்கிகுளத்தில் வசிக்கும் சங்கர், நகைக்கடை பஜாரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் வைரம் மற்றும் தங்கத்தை மதிப்பீடு செய்யும் பயிற்சி எடுத்த சான்றிதழ் பெற்றவர் என்பதால் நகை மதிப்பீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

கொள்ளையர்கள்


கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற நேரத்தில், இவர் வீட்டில் கொள்ளை போனது. பீரோவை உடைத்து 170 பவுன் தங்கம், வைர நகைகள், ரொக்கம் என்று திருடிச்சென்றனர். இதைக்கேள்விப்பட்டு உடனே ஊருக்குத் திரும்பி வந்தவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தத் திருட்டைக் கண்டிபிடிக்க கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனிப்படை அமைத்தார். அவர்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 31-ம் தேதி, சங்கரின் நகைக்கடைக்கு மாடசாமி என்பவர் வந்திருக்கிறார். நகை செய்யும் தொழிலாளி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், தன்னிடமுள்ள வைர நகையை விற்க வேண்டும், என்று கூறி நகையைக் கொடுத்திருக்கிறார். அதன் தரத்தை மதிப்பீடு செய்ய வாங்கி சோதனை செய்த சங்கருக்கு பயங்கர ஷாக். சமீபத்தில் தன் வீட்டில் திருடுபோன நகைகளில் இந்த வைர நகையும் ஒன்று. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரிடம் ஒரு பக்கம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு, காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பின் காவல்துறையினர் திட்டப்படி அந்த நகையை வாங்கிக்கொண்டு பணத்தை இரண்டு லட்சம் ருபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார். அதை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு போன மாடசாமியைப் பின் தொடர்ந்து மப்டியில் காவலர்கள் சென்றார்கள்.

கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்

நகை விற்ற பணத்தை காளிஸ்வரன், கார்த்திக், பாலமுருகன், ராமர் ஆகியோரிடம் மாடசாமி ஒப்படைக்கும்போது போலீஸ் வளைத்துப் பிடித்தார்கள். அதிலும் பாலமுருகன் தப்பி விட்டார். நான்கு பேரிடமும் விசாரித்தபோது, தாங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்கள். திருடிய தங்க நகைகளை உருக்கிக் கட்டியாக்கி நகைத்தொழிலாளி மாடசாமி மூலம் விற்று வந்திருக்கிறார்கள். இதில் ஒரு நகை மட்டும் வைரம் என்பதால் அதை விற்பதற்கு அதன் மதிப்பு தெரியாமல் வைர நகை  மதிப்பீட்டாளர் சங்கரிடம் வந்திருக்கிறார்கள். அவர் வீட்டில்தான் திருடினார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், இதில் ஈடுபட்ட அனைவரும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறவர்கள்தான். திருட்டு நகைகளை விற்றுத் தருபவர் மாடசாமி. ஏதும் சிக்கல் ஏற்படும் என்று வைர நகையை மதுரையில் விற்க வேண்டாம் என்று திருடர்கள் மாடசாமியிடம் அழுத்திக் கூறியிருக்கிறார்கள். அதை மீறி விற்க வந்து மாட்டியிருக்கிறார். தற்போது இவர்களிடமிருந்து 56 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். மீதி நகைகளை முக்கியக் குற்றவாளியான பாலமுருகனைப் பிடித்தால்தான் மீட்க முடியும்'' என்றார்.

மிகப்பெரிய கொள்ளை வழக்கைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் தானாக  வந்து சிக்கிய கொள்ளையர்களின் கதைதான் தற்போது மதுரையில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய புத்திசாலி குற்றவாளியும் ஒரு தடயத்தை விட்டுச் சென்று விடுவான் என்று சொல்வார்கள். இப்படி நேரடியாக வந்து சிக்குவார்கள் என்பது ஆச்சர்யமானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க