`ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நிம்மதி கிடைத்தது!' - கருணாநிதி சமாதியில் உறங்கியது குறித்து கலங்கும் நித்யா | karunanidhi's Assistant nithya sleep in his memorial

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/06/2019)

கடைசி தொடர்பு:11:28 (07/06/2019)

`ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நிம்மதி கிடைத்தது!' - கருணாநிதி சமாதியில் உறங்கியது குறித்து கலங்கும் நித்யா

`ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நிம்மதி கிடைத்தது!' - கருணாநிதி சமாதியில் உறங்கியது குறித்து கலங்கும் நித்யா

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்படப் பல நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அனைத்து மரியாதைகள், நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு, கருணாநிதி சமாதியில் நேற்று இரவு முழுவதும் ஒருவர் படுத்திருந்துள்ளார். யார் அவர் எதற்காக இங்கு  படுத்திருக்கிறார் என்ற கேள்விக்கு விடையாகக் கிடைத்த ஒரு பெயர் நித்யா. ஆம் கருணாநிதியின் உதவியாளர் நித்யாதான் நேற்று இரவு முழுவதும் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் படுத்திருந்தது. 

 

கருணாநிதிக்கு உதவி செய்யும் நித்யா

நித்யாவை பற்றித் தெரியாதவர்களுக்கு சிறு ஃப்ளாஷ் பேக்! 

கருணாநிதியின் கார் ட்ரைவராகப் பணியாற்றிய ரமேஷ் என்பவர் மூலம் கலைஞருக்கு அறிமுகமானவர்தான் இந்த நித்யா என்கிற நித்தியானந்தன். முதலில் கோபாலபுரம் வீட்டில் சிறு சிறு உதவிகள் செய்துவந்த நித்யா பிற்காலத்தில் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கேயே தங்கியிருந்து முழு நேரமாக கருணாநிதியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. யாருக்காவது பேச வேண்டும் என நினைத்தாலும் நித்யாவின் போனில் இருந்துதான் கருணாநிதி பேசுவார் அந்த அளவுக்கு அவருக்கு நெருக்கமானார் நித்யா. 

நித்யானந்தா

கருணாநிதி காலையில் எழுந்ததிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பெர்சனல் உதவிகள் என இரவு தூங்கும் வரை அவருக்கு அருகிலேயே இருப்பார் நித்யா. தி.மு.க நிர்வாகிகள் யாரேனும் கருணாநிதியைச் சந்திக்க விரும்பினால் முதலில் நித்யாவைச் சந்தித்து  `தலைவர் என்ன மன நிலையில் உள்ளார்’ எனக் கேட்டு அறிந்த பின்னர்தான் அவரிடம் சென்று பேசுவார்களாம். குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட கருணாநிதிக்கு அருகிலேயே அவரின் நிழலாக இருந்தவர் நித்யா. 

 நித்யா

கடந்த வருடம் கருணாநிதி இறந்த பிறகு அவரின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக நடந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கருணாநிதியின் குடும்பத்துடன் சேர்ந்து நித்யாவும் கலந்துகொண்டார். கருணாநிதியின் உடல் முன்பு மிகவும் உருக்கமாக நித்யா நிற்கும் புகைப்படம் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. அதே போன்ற மற்றொரு புகைப்படம்தான் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 

 நித்யா

அவரை தொடர்புகொண்டு, `கருணாநிதி சமாதியில் ஏன் உறக்கம்?' என்ற கேள்வியைக் கேட்டோம். ``அய்யோ...... அதுவா.. என் நண்பர் என்னைக் கேட்காமல் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுவிட்டார். நிச்சயமாக விளம்பரத்துக்காக அந்தப் படத்தை எடுக்கவில்லை. தலைவரிடம் மிகவும் ஆத்மார்த்தமாகப் பணிபுரிந்தேன். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நேற்றுதான் நிம்மதியாக இருந்தேன்.

நினைவிடத்தில் படுத்திருந்த நித்யா

நேற்று மட்டும் இல்ல அதற்கு முந்தைய நாளும் நான் அங்குதான் இருந்தேன். அன்று அலங்கார வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. அதிகாலை நான்கு மணி வரை தலைவர் சமாதியிலிருந்துவிட்டு புறப்பட்டுவிட்டேன். மீண்டும் நேற்று நினைவிடத்துக்குச் செல்லும் போது அங்கு யாரும் இல்லை. ஏதோ அங்கு படுத்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. தலைவருக்கு நான் ஆற்றிய பணியை யாரேனும் கொச்சைப் படுத்திவிட்டால் என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. என்னைப் பற்றிக் கலைஞர் அய்யாவின் மனதுக்குத் தெரியும். அதைவிட வேறு எதுவும் தேவையில்லை" எனக் கலங்கியவாறே பேசி முடித்தார்.