தினகரன் கேட்ட 3 கேள்விகள்; விழிபிதுங்கிய 18 மா.செ-க்கள்! | Dinakaran questions the district secretaries

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:05 (04/06/2019)

தினகரன் கேட்ட 3 கேள்விகள்; விழிபிதுங்கிய 18 மா.செ-க்கள்!

தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது தினகரனின் கேள்விகளுக்கு 18 மாவட்டச் செயலாளர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் கட்சியில் அதிரடி முடிவுகளை தினகரன் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினகரன்

தமிழகத்தில் நடந்த 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் எதிர்பார்த்த ஓட்டுகள்கூட டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். 

கூட்டத்தில் தினகரன், இந்தத் தேர்தலின் முடிவுகள் இப்படி வரும் என எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார். தினகரனின் பேசும்போது குறுக்கிட்ட தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஒருவர், `நீங்கள் மட்டும் தோல்விக்குப் பொறுப்பு இல்லை. நாங்களும்தான் காரணம்' என்று கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரின் பேச்சை சில மாவட்டச் செயலாளர்கள் ஆமோதித்துள்ளனர். 

தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன், ``நெல்லை மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டதாக கட்சித் தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையின் பேரில்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால், கிடைத்த ஓட்டுகளுக்கும் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. சில பூத்களில் ஒரு ஓட்டுகள்கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்குள் காலம்தான் விரயமாகும். இதனால்தான் இந்தத் தேர்தல் முடிவை அனுபவமாக நாம் எடுத்துக்கொள்வோம். அடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்துவோம். இந்த ஆட்சி எப்போது வேண்டுமென்றாலும் கவிழும். இதனால் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகுவோம்" என்று கூறியுள்ளார். 

தினகரன்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஒருவர், ``தேர்தல் தோல்விக்குப்பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூடாரம் காலியாகிவிடும் என எதிரணியினர் கனவு காண்கின்றனர். ஆனால், ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுந்துவருவோம். தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பது சில தொகுதிகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் முக்கியமாக மூன்று கேள்விகளை முன்வைத்தார். முதலாவதாக, தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு உறுப்பினர்கள் உள்ளனர். அப்படியிருந்தும் ஏன் எதிர்பார்த்த ஓட்டு சதவிகிதம் கிடைக்கவில்லை என்று கேட்டார்.

அடுத்ததாக அ.தி.மு.க-வில்தான் நம்முடைய ஸ்லிப்பர் செல்கள் இருப்பதாக நம்பினேன். ஆனால், தேர்தல் முடிவுக்குப்பிறகுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில்தான் அ.தி.மு.க-வின் ஸ்லிப்பர் செல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மூன்றாவதாக, வெற்றி பெறும் தொகுதிகளாக கருதிய தேனி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க எப்படி வெற்றி பெற்றது என்று கேட்டார். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளித்தனர். ஆனால், 18 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அமைதியாக இருந்தனர். அவர்களை நேரில் சந்திக்கும்படி தினகரன் கூறியுள்ளார். இதனால், 18 மாவட்டச் செயலாளர்கள் கூறும் விளக்கத்தின் அடிப்படையில் கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவுள்ளனர். 

நெல்லை மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர். தேர்தலின்போது நெல்லை மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தினகரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர்கள் அதற்குள் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஜெயலலிதா பாணியில் நடத்திவரும் தினகரனுக்கு சமீபத்தில் பெங்களூரு புகழேந்தியின் பேச்சு வருத்தத்தை அளித்துள்ளது. இதனால் புகழேந்தியிடம் பேசிய தினகரன், நீங்கள் பேசுவதற்கு முன் என்னிடம் கலந்து ஆலோசியுங்கள். எந்தநேரத்தில் என்னை போனில் அழைத்தாலும் பதிலளித்துதான் வருகிறேன். உங்களின் பேச்சால், கட்சிக்குள் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, கவனமாகப் பேசுங்கள் என்று கூறியுள்ளார். 

 தினகரன்

தேர்தல் தோல்விக்குப்பிறகு தினகரனின் படைத் தளபதிகளில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க-வில் இணைவதாக தகவல்கள் பரப்பப்பட்டதும் தினகரனைச் சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று தினகரனிடம் அவர் கூறினார். அதற்கு, உங்களைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நான் எதையும் நம்பவில்லை என்று தினகரன் கூறினார். இருப்பினும் ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சால் கூட்ட அரங்கே அதிர்ந்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வெற்றிவேலின் ஆதிக்கத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் ரசிக்கவில்லை. அதுதொடர்பாக தினகரனிடம் அவர்கள் கலந்து ஆலோசித்துள்ளனர். முதல்கட்டமாக 6  மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுக்க தினகரன் முடிவு செய்துள்ளார். அதற்கான பைல்களுடன் சசிகலாவைச் சந்திக்க தினகரன் பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளார்" என்றார். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அ.தி.மு.க-வில் ஐக்கியமான நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது, ``நம்பி ஏமாந்துவிட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். எவ்வளவு நாள்களுக்குத்தான் எங்களின் சொந்தப்பணத்தை செலவழிக்க முடியும். அரசியல் எதிர்காலம் கருதி, மீண்டும் தாய்க்கழகத்துடன் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் விரைவில் காலியாகிவிடும்" என்றனர். 

அ.தி.மு.க-வுடன் எந்தவிதத் தொடர்பும் வைக்க வேண்டாம் என்பதுதான் தினகரனின் முதல் நிபந்தனை. ஆனால், அதை மீறி இந்தத் தேர்தலில் பலர் அ.தி.மு.க-வுடன் கைகோத்த தகவல் தினகரனுக்கு ஆதாரத்துடன் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தினகரன், விரைவில் அவர்களுக்கு கல்தா கொடுக்க உள்ளார்.